Skip to main content

சாராயம் காய்ச்சியவருக்கு ‘மாமூல்’ போலீஸ் சப்போர்ட்! -உயிர் பயத்தில் ஒரு குடும்பம்!

Published on 18/05/2020 | Edited on 18/05/2020

 

 Vellore Power cut issue

 

“நீதான போலீஸ் மேல பெட்டிஷன் போடறவன்.. அவன் சாராயம் காய்ச்சினா உனக்கென்னடா.. வம்பா செத்து போயிடுவ.. வீட்ட காலி பண்ணிட்டு போயிடு. உன் புகாரை வாங்க முடியாதுடா..”

சமூக ஆர்வலர் என்று சொல்லப்படும் பிரகாஷ், சாராயக் கும்பலொன்று, தன்னைக் குடும்பத்தினரோடு கொலை செய்வதற்குத் திட்டம் வகுத்துள்ளதாக, ராஜபாளையம் வடக்குக் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்தபோது, சார்பு ஆய்வாளர் முத்துகுமார் திட்டிய வார்த்தைகள் இவை.  
 


என்ன விவகாரம் இது?

பிரகாஷ் வீட்டுக்கு அருகிலுள்ள வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக ‘ஊறல்’ போட்டிருந்தனர். இந்திரா நகர் பச்சை காலனியில் அய்யனாரும் அவருடைய மனைவி ராமலட்சுமியும், இதுபோன்ற சமூக விரோதச் செயலில் ஈடுபட்டு வருவது தெரிந்தும், ‘மாமூல்’ தருவதால், காவல்துறையினர் கண்டுகொள்வதில்லை. இதுகுறித்து, தென்மண்டல ஐ.ஜி. மற்றும் விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் போன்ற உயரதிகாரிகளிடம் சிலர் முறையிட, ஸ்ரீவில்லிபுத்தூர் மதுவிலக்கு போலீசார் அய்யனார் வீட்டில் சோதனை நடத்தி, சாராய ஊறலைக் கைப்பற்றினர். அய்யனாரும் ராமலட்சுமியும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். பிறகு,  இருவரும் ஜாமீனில் வெளிவந்தனர்.  

‘காவல்துறை உயரதிகாரிகள் வரைக்கும் தகவல் அளித்து, தங்களைச் சாராயத் தொழில் பார்க்கவிடாமல் செய்தது பிரகாஷ்தான்..’ என அய்யனாருக்கு சந்தேகம் எழ, கார்த்தீஸ்வரன் உள்ளிட்ட குண்டர்கள் சிலர், ஆயுதங்களோடு பிரகாஷ் வீட்டுக்கு வந்து, “எங்க அண்ணன் சாராயம் காய்ச்சுவான்.. கஞ்சா விற்பான்.. உனக்கு எதுக்குடா வலிக்குது?” என்று கேட்டு தாக்குதல் நடத்த முயன்றுள்ளனர். உயிர் பயத்துடன் புகார் கொடுக்க வந்தபோதுதான், ராஜபாளையம் வடக்குக் காவல் நிலையம், பிரகாஷை விரட்டியடித்துள்ளது. காரணம் – சாராயம் காய்ச்சிய அய்யனார் மூலம் தொடர்ந்து கிடைத்துவந்த மாமூல் நின்றுபோனதுதான்.

 

 


ராஜபாளையம் வடக்குக் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் முத்துகுமாரை தொடர்புகொண்டோம்.

“இந்த பிரகாஷ் வித்தியாசமான ஆளா இருக்கான். என் மேலயே ஏழெட்டு பெட்டிஷன் போட்டிருக்கான். ஒரு முடிவோடு என்னைப் பத்தி பொய்ப் பொய்யா சொல்லுறான். அவனுக்கு அய்யனாருக்கும் வீட்ட வாங்குறதுல பிரச்சனை இருந்துக்கிட்டே இருக்கு. அய்யனார் வீட்ல சாராய ஊறலைப் பிடிச்சதே நான்தான்..” என்று ஒரே போடாகப் போட்டார்.  

நம்மிடம் பிரகாஷ் “கிரிமினல்களுக்கு துணைபோகும் போலீசார்,  என் போன்ற சமூக அக்கறை உள்ளவர்களுக்கு, உயிர் அச்சத்தையும்,  பொய் வழக்கு பயத்தையும் ஏற்படுத்தி விடுகின்றனர்.” என்றார் பரிதாபமாக. 

திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.. என்ற பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகள், மாமூல் வாங்குவோருக்கும் பொருந்தும்தான்!

 


 

சார்ந்த செய்திகள்