இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுமையிலும் விநாயகர் சிலைகள் காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. பகுதிகளின் தன்மைக்கேற்ப சிலைகள் ஓரிரு நாட்களில் விசர்ஜனம் (கரைப்பு) செய்யப்படுகின்றன.
கடந்த ஆண்டு இதேபோன்று வழக்கம்போல் நெல்லை மாவட்டத்தின் செங்கோட்டை நகரிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பக்தர்கள் வழிபாட்டிற்குப் பின்னர் இந்து அமைப்புகள், மற்றும் பா.ஜா. பொறுப்பாளர்களால் செங்கோட்டை மற்றும், அருகிலுள்ள தென்காசி போன்ற நகரங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் செங்கோட்டை அருகேயுள்ள குண்டாற்றில் கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தால் நகரம் பதட்டமானது. பின்னர் கட்டுப்படுத்தப்பட்டு போலீசாரின் பாதுகாப்போடு விசர்ஜனம் முடிந்தது.
அதே போன்றதொரு சூழல் தற்போதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஊர்வலம் தொடர்பாக வருவாய்துறை மற்றும் காவல் துறை தரப்பினரால் ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது. இந்தாண்டு செங்கோட்டையில் 34 விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ள நிலையில் நாளை 3ம் தேதி விசர்ஜனம் செய்வதற்காகப் பேசி முடிக்கப்பட்டுள்ளது. எனவே விசர்ஜனத்திற்காக சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றபோது, அவைகள் பிரச்சினையின்றி முடியும் பொருட்டு வழியோரங்களிலும் போலீஸ் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் பொருட்டு ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
இது குறித்து நக்கீரன் இணையதள நிருபரிடம் பேசிய மாவட்ட எஸ்.பி.யான அருண்சக்தி குமார், ஊர்வல பாதுகாப்பின் பொருட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தென்காசி, அச்சன்புதூர் செங்கோட்டைப் பகுதிகளின் சிலைகள் விசர்ஜனம் செய்வதற்காக 12 மணிக்கு ஊர்வலமாகக் கிளம்பி, மாலை 5 மணிக்குள் முடித்துவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளதாகச் சொன்னார்.