நக்கீரன் இணையதளத்தில் வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் ம.க.ஸ்டாலின்.
கும்பகோணத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி பாமகவில் இருந்து நீக்கப்பட்ட ம.க.ஸ்டாலின் தலைமையில், ம.க.ராஜா நினைவு அறக்கட்டளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருமங்கலக்குடி பகுதியில் இருந்து இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த ம.க. ஸ்டாலின் ஆதரவாளர்களோ, "அண்ணனுக்கு தஞ்சை மாவட்டத்தில் இன்னும் எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பதை கட்சிக்கு உணர்த்தவே இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி அசத்தினோம். இதை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நன்கு உணர்ந்து மீண்டும் கட்சியில் இணைத்து அவருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் அவர்கள் எங்கு போட்டியிட்டாலும் வெற்றிபெற விட மாட்டோம்." என்கிறார்கள் என்று நக்கீரன் இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது.
இதையடுத்து நக்கீரன் நிருபரை தொடர்புகொண்ட ம.க.ஸ்டாலின், ’’ நான் பாமகவிற்கு எதிராகவும் மருத்துவர் ஐயா குடும்பத்திற்கு எதிராகவும் இருக்கிறேன் என்று கூறுவது முற்றிலும் பொய். இதை யாரோ எனக்கு வேண்டாதவர்கள் இப்படி வதந்திகளை பரப்பி வருகிறார்கள். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன், மறுக்கிறேன்.
எனது குடும்பம் கம்யூனிஸ்ட் பாரம்பரியம் கொண்ட குடும்பம். அப்பா கலியபெருமாள் இருக்கும் வரை கம்யூனிஸ்ட் ஆகவே இருந்து மறைந்தார். அதற்குப் பிறகு எனக்கு விவரம் தெரிந்த காலத்திலிருந்து, அதாவது 1986 மாணவர் பருவம் ஆக இருந்த போது மருத்துவர் அய்யா தான் உலகம் என அங்கு சேர்ந்தோம், அதுமுதல் இன்றுவரை 33 ஆண்டுகள் அந்த கட்சிக்காகவே உழைத்துக் கொண்டிருக்கிறேன், கட்சிக்காக இரண்டு தம்பிகளை பலிகொடுத்தேன், இருக்கும் இரண்டு தம்பிகளும் பாமகவில் தான் இருக்கிறார்கள்.
பாமகவில் இருந்து நீக்கப்பட்ட போதிலும் ஐயாவின் படத்தையும், பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்டியையும் தான் கட்டி சுமந்து செல்கிறேன். ஆயுசு முழுவதும் அப்படித்தான் இருப்பேன். மாணவர்கள் கல்லூரி, பள்ளிகளில் படிக்கும்போது பெண்களை காதலித்தார்கள், ஆனால் நானோ மருத்துவர் இராமதாசுவை காதலித்தேன், அதிலிருந்து இன்றுவரை காதலித்து கொண்டு தான் இருக்கிறேன். மருத்துவர் ஐயா எனது குடும்ப தலைவர். நான் அந்த குடும்பத்தில் ஒரு உறுப்பினர் குடும்பத்தில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் அதை சரி செய்து கொள்ளும் பக்குவம் எங்களுக்கு உண்டு. மூத்தவர் திட்டிவிட்டார் என்பதால் நான் அவரை உதாசீனப் படுத்திவிடமுடியாது. அப்படி நினைக்கவும் இல்லை. எனது உயிர் இருக்கும் வரை பாமகவில்தான் இருப்பேன். எந்த நிலையிலும் அந்தக் கட்சியில் இருந்து மாற மாட்டேன்." என்றார் உணர்ச்சி பொங்க.