சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவுறுத்தி இருந்தது. இந்தநிலையில், செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் மேட்டுகாலனி அருகே நீர்நிலைகளில் இருந்து வெளியேறிய உபரி நீர் தேங்கியதால் பல்வேறு இடங்களில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
இன்று காலை முதல் சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பொழிந்தது. மாமல்லபுரம், செங்கல்பட்டு, மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பொழிந்தது. இந்நிலையில், அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட மேட்டுகாலனி பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள பகுதியில் மழைநீர் சூழ்ந்தது. ஏற்கனவே 'மிக்ஜாம்' புயல் காரணமாக அந்த பகுதியில் உள்ள ஏரிகள் மற்றும் நீர் நிலைகளில் இருந்து வெளியேறிய உபரி நீர் மற்றும் இன்று மதியம் கனமழை பொழிந்தால் குடியிருப்பு பகுதிகளில் நீர் சூழ்ந்தது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க வெளியே வர முடியாமல் பொதுமக்கள் தவித்தனர். அதேபோல் அந்த பகுதியில் சாலை ஓரத்திலும் நீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து சேவையிலும் சற்று பாதிப்பு ஏற்பட்டது.
அதேபோன்று செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் உள்ள அரசு மருத்துவமனையில் வெள்ள நீர் புகுந்துதால் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் அனைவரும் 108 அம்புலன்ஸ் மூலம் மதுராந்தகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கட்டடம் முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. நோயாளிகளின் படுக்கை அறை வரை தண்ணீர் உள்ளதால் நோயாளிகள் மற்றும் அந்த பகுதி மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.