பருவமழை காலங்களில் வீடுகள், நிறுவனங்களில் மின்சாதனங்களை எப்படி கையாள வேண்டும், என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழக மின்வாரியம் விரிவான ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
இதுகுறித்து சேலம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வீடுகள், நிறுவனங்களுக்கான மின்சார வயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்ற ஒப்பந்ததாரர் மூலமாகவும், ஐஎஸ்ஐ முத்திரை பெற்ற தரமான மின்சாதனங்களைக் கொண்டும் மேற்கொள்ள வேண்டும்.
சுவிட்ச் போர்டுகளில் பிளக்குகளை பொருத்தும் முன்பும், எடுக்கும் முன்பும் சுவிட்ச் ஆஃப் செய்ய வேண்டும். குளிர்சாதன பெட்டி, கிரைண்டர் ஆகியவற்றுக்கு எர்த் வசதியுடன் கூடிய 3 'பின்' சாக்கெட் உள்ள பிளக்குகள் மூலமாக இணைப்பு கொடுக்க வேண்டும்.
கேபிள் டிவி வயர்களை, மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்ல வேண்டாம். உடைந்த சுவிட்ச், பிளக்குகளை உடனடியாக மாற்ற வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் சரியான எர்த் பைப் போடுவதுடன், அதை குழந்தைகள், பிராணிகள் தொடாத வகையில் அமைத்து பராமரிக்க வேண்டும்.
சுவிட்சுகள், பிளக்குகள், குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும். மின் கம்பம் மற்றும் அதற்காக போடப்பட்டுள்ள ஸ்டே வயர் மீது கொடி கயிறுபோல துணி காய வைக்கும் செயல்களைச் செய்யக்கூடாது. அவற்றில் கால்நடைகளை கட்ட வேண்டாம்.
மின் கம்பத்தை பந்தலாக பயன்படுத்துவதையும், அதன்மீது விளம்பர பலகை கட்டுவதையும் தவிர்க்க வேண்டும். குளியலறை, கழிப்பறைகளில் ஈரமான இடங்களில் சுவிட்சுகளை பொருத்த வேண்டாம்.
மழை மற்றும் பெருங்காற்றால் அறுந்து விழுந்த மின்சார கம்பி அருகே செல்ல வேண்டாம். அவ்வாறு இருந்தால் உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின்மாற்றிகள் மற்றும் துணை மின் நிலைய வேலியின் அருகே சிறுநீர் கழிக்க வேண்டாம்.
மின்சாதனங்களில் தீவிபத்து ஏற்படும்போது, உலர்ந்த மணல், கம்பளி போர்வை, உலர்ந்த ரசாயனப்பொடி அல்லது கார்பன் டை ஆக்சைடு வாயு பயன்படுத்த வேண்டும். தண்ணீர் கொண்டு அணைக்க வேண்டாம்.
இடி, மின்னலின்போது வெட்டவெளி, திறந்தவெளியில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்க வேண்டாம். மேலும், அதுபோன்ற சமயங்களில் டிவி, மிக்ஸி, கிரைண்டர், கணினி, செல்போன் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டாம்.
சேலம் மாநகராட்சி வட்டத்திற்குள் ஏற்படும் மின்தடை மற்றும் பழுதை சரி செய்ய 9445851912 (வாட்ஸ்ஆப்), 1912 (லேண்ட்லைன்), 180042519122, 0427 2414616, 9445857471 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
செயற்பொறியாளர்களிடம் சேலம் நகரத்திற்கு 9445852090, சேலம் கிழக்கு 9445852310, சேலம் மேற்கு 9445852320, சேலம் தெற்கு 9445852330, வாழப்பாடி 9445852350, ஆத்தூர் 9445852340 ஆகிய எண்களிலும், மேற்பார்வை பொறியாளரை 9445852300 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு சண்முகம் தெரிவித்துள்ளார்.