சேலத்தில் இன்று இரவு ஒரு மணி நேரம் தொடர்ந்து பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்! தமிழகத்தில் ஜூன் மாதம் தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு பொய்த்துப்போனது. எனினும், பரவலாக சில இடங்களில் மழை பெய்தது. இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பரவலாக இரண்டு நாள்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்து இருந்தது.
இது ஒருபுறம் இருக்க, சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் பண்டிகை, ஆடி மாதத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். ஏற்கனவே அம்மனுக்கு கம்பம் நடுதல் விழா முடிந்த நிலையில், இன்று இரவு கோட்டை மாரியம்மன் மற்றும் மாவட்டம் முழுவதும் இதர அம்மன் கோயில்களிலும் பூச்சாட்டுதல் நடந்தது. பூச்சாட்டுதல் விழாவின்போது சேலத்தில் கண்டிப்பாக மழை பெய்யும் என்ற நம்பிக்கையும் மக்களிடம் இருந்து வருகிறது. இந்நிலையில், இன்று (ஜூலை 23, 2019) காலை முதலே சேலத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து, மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
இரவு 7 மணியளவில் லேசாக தூறலுடன் மழை பெய்யத் தொடங்கியது. அடுத்த பத்து நிமிடத்தில் மழையின் வேகம் அதிகரித்தது. தொடர்ந்து ஒரு மணி நேரம் நல்ல மழை பெய்தது. இதனால் சேலம் மாநகரில் கிச்சிப்பாளையம், கருவாட்டுப்பாலம், மேட்டுத்தெரு, நாராயணநகர், அம்மாபேட்டை, பெரமனூர், பள்ளப்பட்டி, நெடுஞ்சாலை நகர், ஜான்சன்பேட்டை, கன்னங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடியது.
மாநகரின் பல பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதாலும், கழிவு நீர் வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாலும் மழைநீர் வடிவதற்கு நீண்ட நேரமானது. சுகவனேஸ்வரர் கோயில் அருகே, மேட்டுத்தெரு பகுதியில் கழிவுநீர் கால்வாய்கள் அடைபட்டு இருந்ததால், மழைநீர் சாலையிலேயே தேங்கி இருந்தது. இருசக்கர வாகனங்கள் ஊர்ந்து சென்றன. சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள மோட்டார்சைக்கிள்களின் இன்ஜின் பகுதி வரை மழைநீர் தேங்கியது.
இரவு எட்டு மணியளவில் மழையின் வேகம் குறைந்தது. என்றாலும், லேசான தூறல் மழை பெய்து கொண்டிருந்தது. சேலத்தில் தொடர்ந்து வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இன்று பெய்த திடீர் மழையால் மக்களும், அம்மன் பூச்சாட்டுதலன்று எதிர்பார்த்தது போலவே மழை பெய்ததால் பக்தர்களும் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். இரவும் குளிர்ந்துள்ளது.