சென்னையில் பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில் இன்னும் மூன்று மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கடலூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, சேலம், நாமக்கல், விருதுநகர், ராமநாதபுரம், குமரி, நெல்லை, தென்காசி, கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மாலை முதல் கனமழை பெய்து வரும் நிலையில் நான்கு மணி நேரத்தில் சராசரியாக 6.7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கொளத்தூரில் 14 சென்டிமீட்டர் மழையும், திருவிக நகரில் 12 சென்டிமீட்டர், அம்பத்தூரில் 12.6 சென்டிமீட்டர், அண்ணா நகரில் 10 சென்டிமீட்டர், மீனம்பாக்கத்தில் 10.9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னை நகரில் மட்டும் ஐந்து இடங்களில் 10 சென்டி மீட்டருக்கு மேல் பலத்த மழை பதிவாகியுள்ளது.
கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சென்று பணியாற்ற வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.