உள்ளாட்சித் தேர்தலையொட்டி டாஸ்மாக் மதுபானக்கடைகள் மூடப்பட்டதால், மது பிரியர்கள், அரசியல் கட்சியினர் இரு நாள்களுக்கு முன்பே வழக்கத்தைவிட கூடுதலாக மதுபானங்களை வாங்கி இருப்பு வைத்துக் கொண்டனர். இதனால் டாஸ்மாக்கில் 30 சதவீதம் வரை மதுபான விற்பனை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 (வெள்ளிக்கிழமை) மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் உள்ளாட்சி அமைப்பு பகுதிகளில் புதன்கிழமை மாலையில் பரப்புரை முடிந்தது.
தேர்தலையொட்டி சேலம் மாவட்டம் முழுவதும் 3000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று (டிச. 25) மாலை 5 மணி முதல், வாக்குப்பதிவு நடைபெறும் 27ம் தேதி மாலை 5 மணி வரை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள், பார்களையும் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.
அதேபோல், இரண்டாம்கட்ட தேர்தலையொட்டி, டிச. 28ம் தேதி மாலை 5 மணி முதல் 30ம் தேதி மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன. மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள ஜனவரி 2ம் தேதியன்றும் அனைத்து மதுபானக்கடைகள், மதுக்கூடங்கள் மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ராமன் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் 220 டாஸ்மாக் மதுக்கடைகள், 50க்கும் மேற்பட்ட மதுக்கூடங்கள் உள்ளன. ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி இவை அனைத்தும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளபடி, மூடப்படுகின்றன. தனியார் தங்கும் மதுக்கூடங்கள், நட்சத்திர விடுதிகளில் செயல்பட்டு வரும் மதுக்கூடங்களும் மூடப்படுகின்ற.
அடுத்தடுத்து மதுபானக் கடைகள் மூடப்படுவதால், மது பிரியர்கள் கடந்த இரு நாள்களுக்கு முன்பே மதுபிரியர்கள், அரசியல்கட்சியினர் கூடுதலாக மதுபானங்களை வாங்கி இருப்பு வைத்துக்கொண்டனர். இதனால் கடந்த இரு நாள்களில் வழக்கத்தை விட 30 சதவீதம் வரை கூடுதலாக டாஸ்மாக் மதுபான விற்பனை நடந்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.