Skip to main content

மழையால் சேதமடைந்த சாலைகள்: நெடுஞ்சாலைதுறைக்கு சி.பி.எம் எச்சரிக்கை!

Published on 02/12/2017 | Edited on 03/12/2017
மழையால் சேதமடைந்த சாலைகள்: நெடுஞ்சாலைதுறைக்கு சி.பி.எம் எச்சரிக்கை!

தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக பேராவூரணி தொகுதியில் சேதமடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.



கடந்த சில தினங்களாக பேராவூரணி வட்டாரத்தில் பெய்து வரும் மழை காரணமாக ஒன்றியத்தின் பல்வேறு இடங்களில் உள்ள சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. பேராவூரணி மெயின்ரோட்டில் பல இடங்களில் சாலைகள் பெயர்ந்து குண்டுங்குழியுமாக காணப்படுகிறது. குறிப்பாக இந்தியன் பேக்கரி, ஸ்டேட் மெடிக்கல் மற்றும் பேருந்து நிலையம் முன்புறம் என பல இடங்களில் சாலை அரிப்பு ஏற்பட்டு கப்பிகள் பெயர்ந்து பள்ளங்களாக உள்ளது. இதில் மழைநேரத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால், பள்ளமாக இருப்பது தெரியாமல், இருசக்கர வாகனங்களில் வருவோர் தடுமாறி கீழே விழுவது தொடர்கதையாக உள்ளது.

பழைய பேருந்து நிலையம் அருகில் சேதுசாலையில் இரயில்வே இருப்புப்பாதை இருபுறமும் போடப்பட்ட தற்காலிக சாலை கடுமையாக சேதமடைந்து போக்குவரத்திற்கு பயனற்ற வகையில் மேடுபள்ளமாக உள்ளது.

அதேபோல் பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ள ஆவணம் கடைவீதியில் இருந்து கைகாட்டி வரை பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சாலை கடுமையாக சேதமடைந்துள்ளது. பேராவூரணி பேரூராட்சி வார்டுகளில் பல இடங்களிலும் இதேநிலை தான் காணப்படுகிறது. குறிப்பாக தேவதாஸ் ரோடு, ஆஸ்பத்திரி ரோடு, சிதம்பரம் ரோடு என பல இடங்களில் இதேநிலை காணப்படுகிறது. மேலும் கழனிவாசல், கொரட்டூர், கொன்றைக்காடு, செங்கமங்கலம், அம்மையாண்டி, வீரராகவுபுரம், தென்னங்குடி, மாவடுகுறிச்சி, பின்னவாசல், சித்தாதிக்காடு என ஒன்றியத்தின் பல்வேறு இடங்களில் ஊரகச் சாலைகள் படுமோசமான நிலையில் பராமரிப்பு இன்றி காணப்படுகிறது.

ஒன்றிய அலுவலர்கள், நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் ஆகியோர் ஒப்பந்ததார்களுடன் கூட்டணி அமைத்து கமிஷன் பார்த்து, பர்சென்டேஜ் கொள்ளை அடிப்பதால் அமைக்கப்படும் சாலைகள் தரமற்றதாகவும், அமைக்கப்பட்ட சிறிது நாட்களிலேயே சேதமடைவதுமான நிலை உள்ளது. சாலை அமைப்பதில் உள்ள தர விதிகளை, அதிகாரிகள் கையூட்டு பெற்றுக்கொண்டு கண்டு கொள்ளாமல் இருப்பதே இதற்கு காரணமாக உள்ளது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சாலை சீரமைக்க சிபிஎம் வலியுறுத்தல் 

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக்குழு சார்பில், பேராவூரணி ஒன்றியச்செயலாளர் ஏ.வி.குமாரசாமி கூறுகையில், " தற்போது (லேசாக) சிறிதளவு பெய்த மழைக்கே சாலைகள் சேதமடைந்துள்ளது. ஒன்றியத்தின் பல்வேறு முக்கிய சாலைகள், ஊரகப்பகுதிகளில் உள்ள சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய நிர்வாகமோ, நெடுஞ்சாலை துறையோ கண்டுகொள்ளாத நிலை உள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் சிறப்புக்கவனம் செலுத்தி சாலையை சீரமைக்க வேண்டும். இல்லையெனில் மக்களை திரட்டி ஒன்றிய அலுவலகம், நெடுஞ்சாலை துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்" என்றார்.

-இரா. பகத்சிங்

சார்ந்த செய்திகள்