தமிழகத்தில் பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில் வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று மதியம் 1 மணி வரை 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், 'ஆகஸ்ட் 17-ல் தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி, திருப்பூர், தேனியில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி, தர்மபுரி, கன்னியாகுமரி, நெல்லை, வேலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஆகஸ்ட் 17-ல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 18 ஆம் தேதி திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, நீலகிரி உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும் மதுரை, திருச்சி, சேலம், விருதுநகர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் ஆகஸ்ட் 19ஆம் தேதி கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 20 ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று மதியம் 1 மணி வரை 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வெளியான அறிவிப்பின்படி, நெல்லை, தென்காசி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களில் மதியம் ஒரு மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.