சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் மீண்டும் மழை பொழிந்து வரும் நிலையில் சென்னையில் பல இடங்களில் திடீரென பெய்த கனமழை காரணமாகத் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். சென்னை அருகே ஆவடி சாலையில் குளம்போல் நீர் தேங்கியதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள பிரதான சாலையில், சாலையில் உள்ள பள்ளம் தெரியாத அளவிற்கு மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், திருச்சி, கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.