தமிழக அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீர் மக்கள் பயன்பாட்டிற்கு இல்லாமல் வீணாக கடலில் கலக்குமானால் இனி தமிழகத்தில் போராட்டம் வெடிக்கும் என்கிறார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன்.
இது குறித்த அவரது அறிக்கை: ‘’கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக கர்நாடகாவில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணைகள் அனைத்தும் நிரம்பி காவிரியில் 50,000 கன அடிக்கு மேலான நீர் தமிழகத்திற்கு திறந்துவிடப் பட்டிருப்பதால் வேகமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்து இன்னும் சில நாட்களுக்குள் மேட்டூர் அணை நிரம்ப போகிறது.
அதேபோல் தமிழகத்தில் நீலகிரியில் பெய்துவரும் தொடர் மழையால் பில்லூர் அணை நிரம்பி பவானி ஆற்றில் உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் பவானிசாகர் அணையும் ஓரிரு நாட்களில் நிரம்ப போகிறது. மேட்டூர் மற்றும் பவானிசாகர் அணைகள் நிரம்பி வழியும் போது திறந்துவிடப்படும் உபரிநீர் கடலில் கலக்காமல் தேக்குவதற்கு தமிழக அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது. தமிழகத்திற்கு வருடத்திற்குவருடம் அணைகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றும் அளவிற்கு அதிகப்படியான தண்ணீர் கிடைப்பதில்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பின் கிடைக்கும் தண்ணீரை ஆக்கப்பூர்வமான கிடப்பில் போடப்பட்டுள்ள நீர்பாசன திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம் தமிழகத்தின் தண்ணீர் தேவையை வறட்சி காலங்களில் பூர்த்தி செய்துக்கொள்ள முடியும். இதுபோன்ற காலங்களில் தான் அகலப்பாதாளத்திற்கு சென்றிருக்கும் நிலத்தடிநீரை உயர்த்த முடியும்.
அவினாசி – அத்திக்கடவு திட்டம் இந்நேரம் நிறைவேற்றப்பட்டிருந்தால் பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்படும் உபரிநீர் மூலம் குளம், குட்டைகளை நிரப்பி ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திருக்க முடியும். மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டிய உடன் திறக்கப்படும் தண்ணீரும் வீணாக கடலில் தான் கலக்க போகிறது. கிடப்பில் போடப்பட்ட திருமணி முத்தாறு மற்றும் மேட்டூர் உபரிநீர் கால்வாய் திட்டங்கள் இந்நேரம் நிறைவேற்றப்பட்டிருந்தால் சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள குளம், குட்டைகளை மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரால் நிரப்பி நிலத்தடிநீரை செறிவூட்டிருக்க முடியும். காவிரி தண்ணீரை கர்நாடக அரசு நினைத்தாலும் தடுக்க முடியாது என்ற நிலையில்தான் நாளுக்குநாள் வெளியேற்றப்படும் உபரிநீரை அதிகப்படுத்தி வருகிறது. வறட்சி காலங்களில் தண்ணீருக்காக தமிழக மக்கள் மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுக்கிறோம். ஆனால் அதிகமான தண்ணீர் கிடைக்கும் சமயங்களில் அதை மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் கிடப்பில் போடப்பட்டுள்ள அவினாசி – அத்திக்கடவு, திருமணி முத்தாறு மற்றும் மேட்டூர் உபரிநீர் கால்வாய் திட்டம் உள்ளிட்ட இன்னும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்கான எந்தவொரு முயற்சியையும் தமிழக அரசு எடுப்பதாக தெரியவில்லை. தண்ணீருக்காக தமிழகத்தில் போராட்டம் நடத்தும் அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் மற்றும் பொதுமக்களும் தமிழக அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரானது மக்கள் பயன்பாட்டிற்கு இல்லாமல் வீணாக கடலில் கலந்தால் இனி போராட்டம் நடத்த முன்வர வேண்டும். ’’