சென்னையில் ரயிலில் பயணம் செய்த இளம்பெண் தன்னிடமிருந்து செல்போனை பறிக்க முயன்ற இளைஞர்களிடம் இருந்து தப்பிக்க முயன்று ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ரயில்களில் கண்காணிப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தவர் ப்ரீத்தி. இவர் தினமும் கோட்டூர்புரத்தில் இருந்து இந்திரா நகர் வரைக்கும் பறக்கும் ரயிலில் பயணம் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த இரண்டாம் தேதி திருவான்மியூருக்கு ரயிலில் சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத இரண்டு இளைஞர்கள் ப்ரீத்தி கையில் வைத்திருந்த செல்போனை பறித்துள்ளனர். இதனால் பதற்றமடைந்த ப்ரீத்தி நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 8 ஆம் தேதி உயிரிழந்தார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருவான்மியூர் ரயில்வே போலீசார், ப்ரீத்தியிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பேரை தீவிரமாகத் தேடி வந்தனர். செல்போனை ட்ராக் செய்ததில் பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ், அடையாறு பகுதியைச் சேர்ந்த மணிமாறன் ஆகிய இருவர் செல்போனை திருடியது தெரியவந்தது. உடனடியாக இருவரையும் திருவான்மியூர் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் வழிப்பறி திருடர்களால் இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து ரயில்களில் சிறப்பு பாதுகாப்புக் குழு அமைத்து கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே போலீசார் அறிவித்துள்ள இக்குழுவில் 15 காவலர்கள் இருப்பார்கள். அதில் ஆண் காவலர்கள் 10 பேரும் 5 பெண் காவலர்களும் இடம் பெற்றிருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி ரயில் நிலையம் வரை இந்த சிறப்புக் குழு பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் என ரயில்வே போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.