ஆற்றை தூர்த்து கட்டப்பட்ட ரயில்வே கீழ் பாலத்தில் தண்ணீர் தேங்கியதால் எட்டுக்கும் மேற்பட்ட கிராம மக்களின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் அருகே உள்ள கீழகூத்தங்குடியில் ரயில்வே கீழ்பாலம் அமைக்கப்பட்டு கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாலத்தின் பாதை திறக்கப்பட்டது. காட்டாறு கரையை தூர்த்து கட்டப்பட்டதால் பாலத்தில் மழைக்காலத்தில் தண்ணீர் வடிவதற்கு காட்டாறு பகுதியிலேயே குழாய் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதைத் தொடர்ந்து ஆற்றின் தரை மட்டமும், கீழ் பாலத்தின் தரைமட்டமும் ஒரே அளவாக இருந்ததன் காரணமாக தண்ணீர் பாலத்தின் உள்ளே புகுந்து போக்குவரத்திற்கும், பொதுமக்களின் பயன்பாட்டுக்கும் வேட்டுவைத்துவிட்டது. பொதுமக்கள் செல்ல முடியாத சூழ்நிலையே ஏற்பட்டிருக்கிறது.
திருவாரூர் வருவாய் வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் பாலத்தை ஆய்வு செய்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு சென்றனர். இதேபோல் ரயில்வே அதிகாரிகளும் ஆய்வு செய்ய வந்து போஸ் கொடுத்தனர். இதைக்கண்டு கோபமான பொதுமக்கள், ஆய்வு செய்ய வருகிறீர்கள், போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு போறீங்க எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பிறகே வட்டாட்சியர் நக்கீரன், மோட்டார் மூலம் தண்ணீரை அகற்றுவதற்காக நடவடிக்கை மேற்கொண்டார். தண்ணீரை அகற்றி பொதுமக்கள் நடந்து செல்வதற்கு பாதையை தற்காலிகமாக ஏற்படுத்தி வருகின்றனர்.
அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ’’ரயில்வே கீழ் பாலம் அமைப்பதற்கு முன்பு இப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தோம். ஆனால் இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் ஆற்றை தூர்த்து பாலத்தை கட்டியுள்ளனர்கள். இந்த பாலத்தின் காரணமாக இப்போது உள் கிராமங்களிலிருந்து செல்லும் பள்ளி மாணவர்கள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் ,வேலைக்குச் செல்பவர்கள் என அனைவருமே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் வாகனம் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .எனவே இந்த கீழ் பாலத்தை மூடிவிட்டு உடனடியாக ஆள் உள்ள ரயில்வே கேட் ஆக மாற்றி தர வேண்டும்’’ என்கிறார்கள்.