
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த செப்.23 ஆம் தேதி ஆத்தூர் அருகே முன்னாள் மாசுக் கட்டுப்பாடு வாரியத் தலைவர் வெங்கடாசலம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்தனர். அந்த சோதனையில் வெங்கடாசலம் வீட்டில் 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட தேரடி வீதியில் உள்ள வெங்கடாசலதிற்கு சொந்தமான வீட்டிலும் அதிகமாகச் சொத்து சேர்த்ததாகக் கூறி லஞ்ச ஒழிப்பு போலீசார் செப்.23 ஆம் தேதி சோதனை நடத்தினர். அதேபோல் அவரது வங்கி லாக்கரில் சோதனை நடத்தப்பட்டிருந்தது. இந்த புகாரில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சென்னை வேளச்சேரியில் தலைமைச் செயலக காலனியில் உள்ள வீட்டில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வேளச்சேரி போலீசார் அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.