Skip to main content

திறக்கப்படாத ரயில்வே மேம்பாலம்! எச்சரித்த பாஜக! நாளை திறப்புவிழா?

Published on 06/04/2022 | Edited on 06/04/2022

 

Railway flyover unopened! BJP warned! Opening ceremony tomorrow?

 

திருவண்ணாமலை ஆன்மீக நகரம் என்பதால் தினமும் வெளிமாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகிறார்கள். சென்னை, பாண்டிச்சேரி, பெங்களுரூ, வேலூர் மற்றும் தென்மாவட்டங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இங்கிருந்து பயணம் செய்கிறார்கள்.

 

திருவண்ணாமலை நகரத்துக்கு வருவதற்கு 9 சாலைகள் உள்ளன. இதில் பெங்களுரூ சாலை, வேலூர் சாலை, சென்னை சாலை போன்றவற்றில் 15 நிமிடத்துக்கு ஒரு அரசு பேருந்து, இடைப்பட்ட நேரத்தில் தனியார் பேருந்துகள் பயணமாகிக்கொண்டே இருக்கும். திருவண்ணாமலையில் இருந்து சென்னை செல்லும் சாலையில் நகரத்துக்குள்ளேயே ரயில்வே கிராஸிங் உள்ளது. ரயில் வரும்போது ரயில்வே கேட் மூடப்படுவதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி அது கிளியராக 30 நிமிடங்களாவது ஆகும். இதனால் திருவண்ணாமலை டூ சென்னை சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது திருவண்ணாமலை நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்களின் பல ஆண்டுகால கோரிக்கை.


2015 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் 39 கோடியில் மேம்பாலம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. 2019 பிப்ரவரி மாதம் மேம்பால கட்டுமான பணி தொடங்கியது. அப்போது திருவண்ணாமலை டூ சென்னை, திருவண்ணாமலை டூ விழுப்புரம், திருவண்ணாமலை டூ திருக்கோவிலூர், பெங்களுரூ டூ பாண்டிச்சேரி செல்லும் வாகனங்களின் பாதை மாற்றப்பட்டு பேருந்து நிலையத்தில் இருந்தும், பிறசாலைகளில் இருந்து வரும் வாகனங்களும் அவலூர்பேட்டை சாலை வழியாக பைபாஸ் சாலைக்கு சென்று மேற்கண்ட ஊர்களுக்கு செல்லும் சாலைகளில் இணைவது போல் மாற்றிவிடப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக பொதுமக்கள் சுமார் 5 கி.மீ முதல் 7 கி.மீ வரை சுற்றிக்கொண்டு நகரத்துக்கு வந்து செல்ல துவங்கினர். இதனால் அவலூர்பேட்டை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, நகருக்குள்ளும் போக்குவரத்து நெரிசல் அதிகமானது.

 
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்ததும், இந்த மேம்பால பணியை வேகமாக முடிக்க வேண்டுமென பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, மூன்று முறை கள ஆய்வு செய்து வேலையை தூரிதப்படுத்தினார். மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு முழுதாக 3 மாதங்களாகிவிட்டது. இன்னும் திறப்பு விழா செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் 7 கி.மீ சுற்றிக்கொண்டு நகருக்குள் வருகின்றனர். அதோடு தினமும் பள்ளி, கல்லூரி நேரத்தில் நகரத்தில் கடும் போக்குவரத்து நெரிசலால் நொந்துபோகும் மக்கள், ஆட்சியாளர்களை திட்டிக்கொண்டே செல்கிறார்கள் என கடந்த மார்ச் முதல் வாரம் நமது நக்கீரன் இணையத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

 
மேம்பால பணி முடிந்து கடந்த இரண்டு மாதங்களாக மூடியே வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். திருவண்ணாமலை வரும் ஆன்மீக பக்தர்களுக்கு பெரிதும் சிக்கலாகிறது. உடனடியாக மேம்பாலத்தை திறக்கவேண்டும் இல்லையேல் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என திருவண்ணாமலை மாவட்ட பாஜக அறிவித்தது.

 
இந்நிலையில் ஏப்ரல் 7 ஆம் தேதி காலை சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பாலத்தை திறந்துவைக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
 

மேம்பாலத்துக்காக பாஜக போராட்டம் நடத்த வாய்ப்பு வழங்ககூடாது, இதனால் உள்ளுர் அரசியலில் அவர்களுக்கு ஏற்றம் கிடைக்கும் என்பதை யூகித்தே உடனடியாக மேம்பாலம் திறப்புவிழா நடத்த திட்டமிட்டார் நெடுஞ்சாலைதுறை அமைச்சரும், திருவண்ணாமலை தொகுதி எம்.எல்.ஏவுமான எ.வ.வேலு என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்