சேலத்தில், முத்திரைத்தாள் கட்டணத்தை குறைத்துத் தர, 1.50 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியரை லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் கோழி அமுக்குவதுபோல் அமுக்கி கைது செய்தனர்.
சேலம் தாதகாப்பட்டியைச் சேர்ந்தவர் தேவேந்திரன். இவருடைய மகன் நிஷாந்த் (24). இவர், சொந்தமாக ஒரு கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய நிறுவனம் சார்பில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே வரகுராம்பட்டியில் 1.18 ஏக்கர் நிலம் வாங்க முடிவு செய்தார். சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் சரகத்திற்கு உட்பட்ட முத்திரைக் கட்டணப்பிரிவு தனித்துணை ஆட்சியர் அலுவலகம் சேலத்தில் இயங்கி வருகிறது.
திருச்செங்கோடு பகுதிக்கான தனித்துணை வட்டாட்சியராக சேலம் காந்தி சாலையைச் சேர்ந்த ஜீவானந்தம் (47) பணியாற்றி வருகிறார். இவரிடம் நிலத்திற்கான முத்திரை கட்டணத்தை குறைத்து தருமாறு நிஷாந்த் கேட்டுள்ளார். அதற்கு ஜீவானந்தம், விற்பனை செய்யப்படும் இடம் விவசாய நிலமா அல்லது என்ன வகைப்பாட்டில் உள்ளது என்பதை புலத்தணிக்கை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த இடம் விவசாய நிலம் என்று அறிக்கை தருவதாக இருந்தால் அதற்கு 2 லட்சம் ரூபாய் கையூட்டு கொடுக்க வேண்டும் என்று வெளிப்படையாகவே கேட்டிருக்கிறார்.
இந்த தொகை அதிகமாக இருப்பதாகவும், கொஞ்சம் குறைத்துக் கொள்ளும்படியும் நிஷாந்த் தரப்பில் பேரம் பேசப்பட்டது. கடைசியாக, 1.50 லட்சம் ரூபாய் கொடுத்தால் போதும் என ஜீவானந்தம் பேரத்தை இறுதி செய்திருக்கிறார். இந்த பணத்தை காந்தி சாலை பகுதிக்கு எடுத்துக்கொண்டு வருமாறும் கூறியுள்ளார்.
இந்த பரிவர்த்தனைக்கு ஒப்புக்கொள்வது போல பேசினாலும் நிஷாந்த் தரப்புக்கு, லஞ்சம் கொடுக்க விருப்பமில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து அவர் சேலம் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறை ஏ.டி.எஸ்.பி. சந்திரமவுலியிடம் நேரில் புகார் அளித்தார்.
லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினரின் வழிகாட்டுதல்படி, ஜீவானந்தம் கேட்டிருந்த 1.50 லட்சம் ரூபாயில் ரசாயனத்தை தடவி, அவர் குறிப்பிட்டிருந்த இடத்துக்கு நிஷாந்த் வியாழக்கிழமை (டிச. 10) காலை எடுத்துச்சென்றார். அங்கு வந்த ஜீவானந்தம், அவரிடம் இருந்து லஞ்ச பணத்தை பெற்றுக் கொண்டார். அவரை வலையில் வீழ்த்துவதற்காக அங்கு ஏற்கனவே மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர், உடனடியாக பாய்ந்து சென்று ஜீவானந்தத்தை கோழி அமுக்குவது போல் அமுக்கி, கையும் களவுமாக கைது செய்தனர். அவரை லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்தனர்.
விசாரணைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பு, அவருக்கு சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அவர் எந்தெந்த சேவைகளுக்கு எவ்வளவு லஞ்சம் வாங்கினார்? தனித்துணை வட்டாட்சியர் ஒருவர் இவ்வளவு பெரிய தொகையை லஞ்சமாக பெறுகிறார் எனில், இதில் உயர் அதிகாரிகள் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம், சேலம் மாவட்ட வருவாய்த்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.