சேலத்தில் கூட்டுறவு வங்கியின் பெயரில், அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி, 58 கோடி ரூபாய் சுருட்டிய வழக்கில், கூட்டுறவு வங்கிக்குச் சொந்தமான 23 கிளை அலுவலகங்களில் பொருளாதார குற்றப்பிரிவினர் சோதனை நடத்தினர்.
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் முனியப்பன் நகரைச் சேர்ந்தவர் ஜெயவேல் (67). இவர், சேலத்தை தலைமை இடமாகக் கொண்டு அமுதசுரபி சிக்கன மற்றும் கூட்டுறவு கடன் சங்கம் என்ற பெயரில் கூட்டுறவு வங்கியை தொடங்கினார். இதில் தனது உறவினர்கள் தங்கபழம், பிரேம் ஆனந்த், சரண்யா ஆகியோரையும் பங்குதாரர்களாக சேர்த்துக் கொண்டார். இவர்கள், சேலம் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் அமுதசுரபி பெயரில் கிளை அலுவலகங்களையும் தொடங்கி நடத்தி வந்தனர். இந்த வங்கியில், குறுகிய கால இட்டு வைப்புகளுக்கு அதிக வட்டி வழங்கப்படும் என முதலீடு செய்தால் அறிவித்தனர். இந்த கவர்ச்சிகரமான அறிவிப்பை நம்பி, ஏராளமான முதலீட்டாளர்கள் அமுதசுரபி கூட்டுறவு வங்கியில் முதலீடு செய்தனர். ஆனால் முதலீட்டாளர்களுக்கு உறுதியளித்தபடி வட்டி வழங்கப்படாததோடு, அசல் தொகையையும் வழங்கவில்லை. ஒருகட்டத்தில், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் அலுவலகத்தை மூடிவிட்டு ஓட்டம் பிடித்தனர். இந்த நிலையில்தான் சேலம் அம்மாபேட்டை தங்கசெங்கோடன் தெருவைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர், கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையில் அமுதசுரபி கூட்டுறவு சங்கத்தில் நடந்த முறைகேடு குறித்து புகார் அளித்தார். அவரிடம் 2.92 லட்சம் ரூபாயை அமுதசுரபி சங்கத்தினர் முதலீடாகப் பெற்று மோசடி செய்து விட்டதாகக் கூறியிருந்தார்.
இதையடுத்து, இந்த சங்கத்தால் ஏமாந்த ஆயிரம் முதலீட்டாளர்கள் அடுத்தடுத்து புகார் அளித்தனர். முதல்கட்ட விசாரணையில், 58 கோடி ரூபாயை ஏமாற்றி இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த புகார் குறித்து டிஎஸ்பி சீனிவாசன் தலைமையில் ஆய்வாளர் சித்ரா தேவி மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அமுதசுரபி கூட்டுறவு நிறுவனம், மாநிலம் முழுவதும் 85 இடங்களில் கிளை அலுவலகங்களை நடத்தி வந்துள்ளது. இவற்றில் ஏற்கனவே 20 இடங்களில் சோதனை நடத்தி, கணினிகள், ஹார்டுடிஸ்குகள் மற்றும் முதலீட்டாளர்கள் பற்றிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில், மேலும் 23 இடங்களில் நேற்று முன்தினம் (ஏப். 25) பொருளாதார குற்றப்பிரிவினர் சோதனை நடத்தியுள்ளனர். சேலம் தாதகாப்பட்டியில் செயல்பட்டு வந்த அமுதசுரபி கூட்டுறவு நிறுவன கிளை அலுவலகத்திற்கு டிஎஸ்பி சீனிவாசன் தலைமையில் காவலர்கள் சென்றபோது அந்த அலுவலகம் காலி செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
அதேபோல், சங்ககிரி & இடைப்பாடி சாலை மற்றும் அயோத்தியாபட்டணத்தில் இயங்கி வந்த அமுதசுரபி அலுவலகங்களும் சுத்தமாக துடைத்து வைக்கப்பட்டது போல் காலி செய்துவிட்டு சென்றிருப்பது தெரிய வந்தது. வாழப்பாடியில் ஆய்வாளர் சித்ராதேவி தலைமையிலான காவலர்களும், தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த அமுதசுரபி அலுவலகங்களில் ஆய்வாளர் முத்தமிழ் செல்வராஜன் தலைமையிலான குழுவினரும் சோதனை நடத்தினர். மேலும், கோவை, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி, திருப்பூர், நாமக்கல், கரூர், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இயங்கி வந்த அமுதசுரபி கூட்டுறவு வங்கி அலுவலகங்களிலும் சோதனை நடந்தது. டிஎஸ்பி சீனிவாசன் தலைமையிலான பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.