காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி தோ்தல் பிரச்சாரத்துக்காக கடந்த 1 -ம் தேதி குமரி மாவட்டம் வந்தார். மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். இந்த நிலையில், ராகுல் காந்தி, நாகா்கோவிலில் இருந்து முளகுமூடு செல்லும் வழியில் உள்ள பரைக்கோட்டில், 5-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆன்டனி ஃபெலிக்ஸ், அவரை வரவேற்கும் விதமாக காமராஜா் படம் கொண்ட பதாகையைக் கையில் ஏந்தியவாறு தனியாக நின்றுகொண்டிருந்தார்.
இதைப் பார்த்த ராகுல் காந்தி, காரில் இருந்து இறங்கி அந்த மாணவனிடம் சென்று பேசினார். அப்போது அந்த மாணவன், "உங்களை நான் தொலைக்காட்சியில் தான் பார்த்திருக்கிறேன், நேரில் பார்க்க ஆசையாக இருந்தது. அது, இப்போது நிறைவேறியுள்ளது" என்று மழலை மொழி மாறாமல் கூறியுள்ளார். உடனே, அந்த மாணவனை கட்டி அரவணைத்த ராகுல், "உனக்கு விளையாட்டில் ஆா்வம் உண்டா? எந்த விளையாட்டு பிடிக்கும்" எனக் கேட்டார். அதற்கு அந்த மாணவன், "தடகள ஓட்டப்பந்தய வீரனாக வேண்டும்" என்ற தனது ஆசையைக் கூறியுள்ளார்.
உடனே ராகுல் காந்தி, "அதற்கு நீ பயிற்சி எடுக்குறாயா?" எனக் கேட்டபோது, "ஆமாம் பள்ளியில் சக மாணவா்களுடன் சோ்ந்து எடுக்கிறேன்" என்றிருக்கிறார். உடனே ராகுல் காந்தி, "நான் உனக்கு ஓரு பயிற்சியாளரை ஏற்பாடு செய்கிறேன். அதோடு, டில்லி சென்றதும் 'ஷூ' ஓன்று வாங்கி அனுப்புகிறேன்" என்றார். இதையடுத்து, 10 நாட்களுக்குப் பிறகு, ராகுல் காந்தி சொன்னது போல் கொரியா் மூலம் அந்த மாணவனுக்கு 'ஷூ' வந்துள்ளது. இதைப் பார்த்து அந்த மாணவனும், பெற்றோரும் மகிழ்ச்சி அடைந்தனா். இந்த விசயம், அந்த மாணவன் வசிக்கும் பகுதியில் பரவ அந்தப் பகுதி வாசிகள், ராகுல் அனுப்பிவைத்த ஷூவை ஆச்சா்யத்துடன் பார்த்துச் செல்கின்றனா். இதனால், அந்தப் பகுதியின் ஹீரோவாக மாறியுள்ளான் சிறுவன் ஆன்டனி ஃபெலிக்ஸ்.