
ஆண்டுக்கு 8000 MT உற்பத்தித் திறன் கொண்டதாக மாற்றப்பட்டு சோடியம் ஹைட்ரோ சல்பேட் தயாரிக்கும் ஆலையான கோவிலூர் தமிழ்நாடு கெமிக்கல் பேக்டரியில் திங்கள் இரவில் பாய்லர் வெடிக்க, ஏற்கனவே போராட்டத்தில் இருந்த மக்கள் இது தான் தருணமென காரைக்குடி மதுரை சாலையினை மறித்து உட்கார்ந்துப் போராடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகாமையிலுள்ளது டி.சி.பி.எல் எனப்படும் தமிழ்நாடு கெமிக்கல் பேக்டரி. எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த காலம் தொட்டே இயங்கி வரும் இந்த ஆலையின் பிரதான உற்பத்திப் பொருள் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டே.!! இந்த கெமிக்கல் பேக்டரியால் விவசாய நிலங்கள் உற்பத்திக்கு தகுதியில்லாமல் பாழ்பட, இங்கு பிறக்கும் குழந்தைகளோ ஊனமுற்றும் பிறந்துள்ளன. இது மட்டுமில்லாமல் இங்கு வெளியாகும் வேதிக்காற்றால் ஆஸ்துமா, கருக்கலைதல் மற்றும் எலும்பு மஜ்ஜைகள் பாதிப்பும் நிகழ்ந்த வண்ணம் இருந்திருக்கின்றன. இந்த கெமிக்கல் பேக்டரி இங்கு வெண்டாமென ஒவ்வொரு தடவையும் அரசாங்கத்திடம் கோரிக்கையினை இங்குள்ள மக்கள் வைக்க, உடனே நடவடிக்கை எடுப்போம்.! என உறுதிமொழி கூறியதோடு அதனை அப்பொழுதே மறந்து வந்துள்ளது மாவட்ட நிர்வாகம். கடந்த 12-02-2015 அன்று இந்த ஆலையிலிருந்து விஷவாயு வெளிப்பட அங்குள்ள சுவாசிக்க முடியாமல் திணறி மருத்துவமனையில் அட்மிட்டாகியுள்ளனர். இது நீடிக்கக் கூடாதென சமீபக்காலமாக மக்களின் ஆலைக்கெதிரானப் போராட்டமும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இவ்வேளையில் திங்களன்று இரவு 8 மணியளவில் கெமிக்கல் ஆலையிலுள்ள பாய்லர் வெடித்து, மறுபடியும் நச்சு வாயு வெளிப்பட கோபப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து, " 1984 அன்று போபாலில் விஷவாயு வெளியேற ஏறக்குறைய 25 ஆயிரம் சாதாரண மக்கள் இறந்தனர். அந்த நிலை வந்தால் தான் ஏதேனும் முடிவெடுக்குமா இந்த அரசு..?" என காரைக்குடி - மதுரை சாலையினை மறித்து சாலை மறியல் செய்து வருகின்றனர். இதனால் காரைக்குடி கழனிவாசல் வழியாக பாதையினை மாற்றி போக்குவரத்து நெரிசலை குறைத்து வருகின்றது காரைக்குடி சரகப் போலீஸ். இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.