தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இரண்டாம் ஆண்டு மாணவரை நிர்வாணமாக நடக்கச் சொல்லி ராகிங் செய்த மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல்லைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவருடைய மகன் குமரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (20). இவர், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவர் விடுதியில் தங்கி, எம்.பி.பி.எஸ். 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவருடன் 200 மாணவர்கள் விடுதியில் தங்கி படிக்கின்றனர். கடந்த நவம்பர் 23ம் தேதி இரவு, விடுதியில் தங்கி படித்து வரும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் சிலர், குமரனை ராகிங் செய்துள்ளனர். இதற்கு சரவணன் எதிர்ப்பு தெரிவித்ததால், சீனியர் மாணவர்கள் அவரை கழுத்தை நெரித்து தாக்கி உள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவர் குமரன், உடனடியாக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் தர்மபுரி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையறிந்த ராகிங் செய்த சீனியர் மாணவர்கள், அவரை மிரட்டியுள்ளனர். அதற்கு பயந்து அவர் புகாரை திரும்பப் பெற்றார். இந்த விடுதியின் காப்பாளர் மருத்துவர் இளவரசன் என்பவர், நோய்க்குறியியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர், புகாரளித்த மாணவரை தேர்வில் தோல்வி அடையச் செய்திருக்கிறார். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த குமரன், டிச. 4ம் தேதி இரவு முதல் மறுநாள் (டிச. 5) வரை தொடர்ச்சியாக தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்று, சுயநினைவின்றி இருந்துள்ளார். உடன் இருந்த மற்ற மாணவர்கள் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தர்மபுரி நகர காவல்நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தினர். கடந்த 23ம் தேதி இரவு விடுதியில் 3ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் 4 பேர் குமரனை அழைத்து ராகிங் செய்துள்ளனர். அப்போது முட்டி போட்டவாறு நடக்க வைத்துள்ளனர். நிர்வாணமாக நடக்கும்படியும் தொல்லை செய்துள்ளனர். இதனால் குமரனுக்கும் சீனியர் மாணவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது குமரனை சீனியர்கள் கழுத்தை நெரித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து வெளியே தெரிய வந்தபிறகும் விடுதி காப்பாளர் இப்பிரச்சனை குறித்து விசாரிக்காமல் அலட்சியமாக இருந்ததும் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் அமுதவல்லி கூறுகையில், ''விடுதியில் ராகிங் நடந்தது குறித்து தெரிய வந்ததும், சம்பந்தப்பட்ட மாணவர்கள் நான்கு பேரையும் ஒரு வாரத்திற்கு சஸ்பெண்ட் செய்து விட்டோம். மேலும், அவர்களை விடுதியில் இருந்தும் அனுப்பி விட்டோம். இச்சம்பவம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. விடுதி காப்பாளர்கள் 2 பேர் மாற்றப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர் குமரன், தற்போது கடும் மன உளைச்சலில் உள்ளதால் அவர் உடல்நலம் சீராகும் வரை பெற்றோருடன் இருக்க வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்'' என்றார்.