மத்திய பா.ஜ.க அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி நாடே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள், 'டெல்லி சலோ' எனத் தலைநகரம் டெல்லியை முற்றுகையிட்டு, தொடர்ந்து இரவு பகலாகப் போராடி வருகின்றனர். இதில், லட்சக் கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டு, டெல்லியை ஸ்தம்பிக்க வைத்துள்ளனர். மூன்று முறை மத்திய அரசிடம் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.
இதனால் நாளுக்கு நாள் வலிமை பெற்றுவரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு, பல மாநிலங்களில் இருந்து அரசியல் கட்சிகளும் விவசாயிகளும் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்ப பெற வலியுறுத்தியும், தி.மு.க சார்பில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டமும், கம்யூனிஸ்ட் சார்பில் மறியல் போராட்டமும் இன்று 5ஆம் தேதி நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.
இதையொட்டி, குமரி மாவட்ட தி.மு.க சார்பில், கிழக்கு மாவட்டச் செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ தலைமையில், நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், கன்னியாகுமரி தி.மு.க எம்எல்ஏ ஆஸ்டின், தி.மு.க பொருளாளர் கேட்சன் முன்னாள் எம்.பி ஹெலன் டேவிட்சன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதே போல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மனோதங்கராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் கல்குளம் தாலுகா அலுவலகம் முன், கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மேலும், மா.கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் வடசேரி உழவர் சந்தை எதிரில், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், போலீசாருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையை தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட, சுமார் 250-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.