![puthukottai student boram sathya started build new house with Bhoomi Pooja ..!](http://image.nakkheeran.in/cdn/farfuture/Bx6DVXLEcILn6tbG9N4n2-8Axn4DcyOVaZubgd8Xbz4/1606464036/sites/default/files/inline-images/th_269.jpg)
புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் ஊராட்சி போரம் கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட தாயோடு கிழிந்த ஓலை மண் குடிசையில் வசித்த சத்யா என்ற மாணவியை பற்றி மக்கள் பாதையினர் மூலம் தகவல் அறிந்து போரம் கிராமத்திற்கு நேரில் சென்று கள ஆய்வுக்கு பிறகு மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரியின் கவணத்திற்கு கொண்டு சென்று போரம் மாணவி சத்யாவுக்காக உதவிகளை கேட்டோம்.
உடனே அரசு உதவிகள் அனைத்தும் செய்வதாக உறுதியளித்த ஆட்சியர் அடுத்த நாளே வருவாய் துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து வீட்டுமனை பட்டாவுக்கான உத்தரவை வழங்கியதுடன், பசுமை வீடு கட்டவும் ஆணை வழங்கி மாணவி சத்யாவை புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் இளங்கலை படிக்கவும் விடுதியில் தங்கவும் அனைத்து உதவிகளையும் செய்தார். தொடர்ந்து நக்கீரன் இணையத்தில் செய்தி மற்றும் வீடியோ வெளியிடப்பட்ட நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், நேரில் சென்று மாணவிக்கு உடனடி உதவிகளை செய்ததுடன் மாணவி தொடர்ந்து போட்டித் தேர்வுகளுக்கு படிக்க சென்னையில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் சேர்க்க உறுதி அளித்து முதற்கட்டமாக போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களையும் வழங்கினார்.
அதேபோல மாவட்ட மனநலத்திட்ட அலுவலர் மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம், மாணவி மற்றும் மாணவியின் தாயாருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்து தேவையான சிகிச்சைகளையும் வழங்கினார்.
நக்கீரன் செய்தியை பார்த்த உலகமெங்கும் உள்ள தமிழர்கள் பலரும் பலவகையிலும் உதவிகள் செய்தனர். இந்த உதவிகளோடு பெருங்களூர் ஊராட்சிமன்றத் தலைவர் சரண்யா ஜெய்சங்கர் முதல்கட்டமாக மாணவிக்கு உதவியதோடு பசுமை வீட்டை என் பொறுப்பில் கட்டிக் கொடுக்கிறேன் என்று உறுதியளித்திருந்தார்.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவையடுத்து புதுக்கோட்டை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கோகிலகிருஷ்ணன், பசுமை வீடு கட்டும் பணியை விரைவில் தொடங்க உதவினார். மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் பலரது உதவியுடன் இன்று சத்யா வீடு, பூமி பூஜை ஊராட்சி மன்றத் தலைவர் சரண்யா ஜெய்சங்கர் தலைமையில் நடந்தது.
இந்த நிகழ்வில் அரசு அலுவலர்கள், மக்கள்பாதை பொறுப்பாளர்கள் ராமதாஸ், ராஜேஷ் கண்ணன், செல்வி, வெண்ணிலா, ஞானபாண்டியன் உள்ளிடடோர் கலந்துகொண்டனர்.
பூமி பூஜையுடன் வீடு கட்டும் பணி தொடங்கியுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உதவி செய்த அனைவருக்கும் மாணவி சத்யா நன்றி கூறினார். நக்கீரன் சார்பிலும் அனைவருக்கும் நன்றிகள்.