Skip to main content

புதுக்கோட்டையில் ஒரு சிட்டிசன்! 60 வயது ஆகியும் ஒரு ஓட்டு கூட போட்டதில்லை!

Published on 13/03/2019 | Edited on 13/03/2019

 

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு பள்ளி சுவற்றில் அடைக்கலமாகி இருக்கும் 60 வயது சிட்டிசன் முனியாண்டி இதுவரை ஒரு ஓட்டு கூட போட்டத்தில்லை. அரசு கொடுக்கும் எந்த நலத்திட்டங்களையும் பெற்றதில்லை. காரணம் குடியிருக்க ஒரு வீடு இல்லை என்பது தான்.
    தன் வயிற்றைக் கழுவ திருவோணத்தில் ஒரு சாவு வீட்டுக்கு ஒப்பாரி வைக்க புறப்பட்ட முனியாண்டி கண்ணீரோடு நம்மிடம் பகிர்ந்து கொண்டது....

 

m


    ’’கந்தர்வகோட்டை கோயில் தெரு ராசு ஆசாரி மகன் முனியாண்டி தான் நான். எனக்கு 2 அக்கா இருக்காங்க. அப்பா அம்மா வறுமையால குடியிருந்த வீட்டை வித்துட்டு போய் சேர்ந்துட்டாங்க. அக்காக்களும் கல்யாணமாகி போயிட்டாங்க. எனக்கு விபரம் தெரிஞ்ச நாள்ல இருந்து குடியிருக்க வீடு இல்லை. அதனால் கிடைக்கிற இடத்தில தூங்குவேன். கொடுக்கிற வேலையை செஞ்சுட்டு சம்பளம் வாங்கி கடையில சாப்பிடுவேன். தேர்தல் வந்தா எல்லாரும் ஓட்டுப் போட போவாங்க. எனக்கும் ஆசை வந்துச்சு தாலுகா ஆபிஸ் போன்னு சொன்னாங்க . அங்க போனால் வீட்டு முகவரி கொடு. ரேசன் கார்டு கொடுன்னு கேட்டாங்க எதுவுமே இல்ல. கொஞ்சம் இடம் கொடுங்க குடிசை கட்டிக்கிட்டு வாழ்கிறேன்னு கேட்டேன்.  20 வருசமா கலெக்டர் ஆபிஸ்க்கும், தாலுகா ஆபிஸ்க்கும் அழையுறேன்.. எதுவும் கிடைக்கல. 


    இப்ப வயசாகிப் போச்சு. ஒண்ட இடமில்லை.  அதனால பள்ளிக் கூடத்து சுவரோரம் படுத்துக்குவேன். காலையில் எழுந்து பஸ்டாண்டு போய் யாராவது மாலையும் கையுமா நின்னா எந்த ஊர்ல சாவுனு கேட்டு அவங்க கூடவே போய் சாவு வீட்ல ஒப்பாரி வைப்பேன். அங்கே கொடுக்கிறதை வச்சு சாப்பிட்டு கிடப்பேன். பல நாளைக்கு பட்டினி தான். இப்ப கூட திருவோணத்துல செட்டியார் வீட்டு சாவுக்கு போறாங்க. அவங்க கூட போனா ஒப்பாரி வச்சுட்டு கிடைக்கிறதை வாங்கிட்டு வருவேன். 


    எனக்கு ஒரு ரேசன் கார்டு கொடுத்தா அரிசி வாங்கி காச்சி குடிப்பேன்.  பட்டினி இல்லாம சாவேன். எத்தனை முறை தான் மனு கொடுக்க போறது தம்பி.. இத்தனை வயசுக்கு ஒரு ஓட்டு கூட போட்டதில்லை. எனக்கு தான் ஓட்டே இல்லையே என்றார் கண்ணீருடன்.

 

    ஒரு தனி மனிதனுக்கு அடையாளமான ஆதார் அட்டை இல்லை, ரேசன் பொருள் வாங்கியதில்லை.. அரசு நிவாரணம் வாங்கியதில்லை. ஒரு முறை கூட ஓட்டு போட்டதில்லை.. பிறப்பு முதல் இறப்பு வரை இந்திய குடிமகனாக இல்லாமல் வாழும் ஒருவரை இந்தியா எப்படி அனுமதிக்கிறது. 


    100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று சொல்லும் அரசு 60 வயது வரை வாக்குச் சாவடிக்கே அனுப்பாமல் வைத்திருந்த முனியாண்டியை 17 வது மக்களவை தேர்தலில் வாக்களிக்க அனுப்புமா? மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்தால் நிச்சயம் அவருக்கு  வாக்களிக்கும் உரிமை கிடைக்கலாம்.
                
 

சார்ந்த செய்திகள்