உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவுக்குப் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கரோனா தடுப்பு மருந்துகளுக்காக ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறது.
சித்த மருத்துவத்தால் 'நிலவேம்பு' குடிநீர் டெங்குவைக் கட்டுப்படுத்தியது போல 'கபசுரக்குடிநீர்' கொடுத்து கரோனா வைரஸ் பரவலையும் கட்டுப்படுத்தலாம் என்று சித்த மருத்துவர்கள் ஆலோசனை கூறினர். அதன்படி தற்போது 'கபசுரக்குடிநீர்' பொடி வாங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
மற்றொரு பக்கம் மக்கள் நடமாட்டம் அதிகமானால் நோய்த் தொற்றும் அதிகமாகும் என்று ஊரடங்கு அமல்படுத்தி மக்கள் நடமாட்டத்தை அரசுகள் குறைத்து வருகிறது. கோயில்களில் கூட்டம் அதிகமானால் அங்கும் நோய்த் தொற்று பரவும் என்று கோயில்களுக்குப் பக்தர்கள் வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோயில்களில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவும், மக்களைக் காக்கவும் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அதன் தொடர்ச்சியாக இன்று (01/04/2020) புதுக்கோட்டை நகரில் உள்ள பிரசித்தி பெற்ற 'பிரகம்தாம்பாள்' ஆலயத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டது.