கரோனா நோய்த்தொற்று சமூகப்பரவலாகி வருகிறதா இல்லையா என்ற சர்ச்சைகள் ஒருபுறம் இருக்க, முதல்வரின் சொந்த மாவட்டத்திலேயே கடந்த 36 நாள்களில் 25 பேர் நோய்த்தொற்றுக்கு பலியாகி இருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் காய்ச்சல், கண் எரிச்சல், சளி போன்றவை கரோனா தொற்றின் அறிகுறிகள் எனச் சொல்லப்பட்டு வந்தன. அதன்பின்னர் அறிகுறிகள் இல்லாமலேயே இவ்வகை நோய்த்தொற்று உருவாகும் என்றனர்.
கரோனா பற்றிய ஆராய்ச்சியில் அடுத்தக்கட்டமாக இது காற்று மூலமும் பரவும் தன்மையுடையது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இப்போதைக்கு சமூக இடைவெளியும், முகக்கவசம் அணிதல் மட்டுமே கரோனாவில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான ஒரே வழிமுறையென தமிழக அரசும் வலியுறுத்தி வருகிறது.
இதற்கிடையே, நோய்த்தொற்றால் இறப்போர் எண்ணிக்கையும் கடந்த ஒரு மாதத்தில் கணிசமாக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் ஜூலை 19ஆம் தேதி வரை 2,481 பேர் கரோனா நோய்த்தொற்றால் இறந்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 78 பேர் இறந்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை ஊரடங்கு தொடங்கிய மார்ச் முதல் ஜூன் முதல் வாரம் வரை நோயின் தாக்கமும் ஓரளவு கட்டுக்குள் இருந்தது. அத்துடன், கரோனாவால் பலியும் இல்லாமல் இருந்தது.
இந்நிலையில், முதன் முதலில் சேலம் பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் ஒருவரின் 45 வயதான மனைவி, கடந்த ஜூன் 13ஆம் தேதி கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானார்.
ஜூலை 19, 2020ம் தேதி வரை சேலம் மாவட்டத்தில் மட்டும் 25 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.
சேலம் குமாரசாமிப்பட்டியைச் சேர்ந்த 62 வயது பெண் ஒருவருக்கு, கடந்த வாரம் கரோனா உறுதிப்படுத்தப்பட்டது. அதையடுத்து, அவர் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார். அவருடன் சேர்த்து மாவட்டம் முழுவதும் இதுவரை 25 பேர் கரோனாவால் இறந்துள்ளனர்.
இறந்தவர்களில் பெரும்பாலானோருக்கு கரோனா தொற்று மற்றுமின்றி நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், சுவாசக்கோளாறுகள், இருதய நோய், சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட வேறு பல நோய்களும் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலும் சர்க்கரை வியாதியால் அவதிப்படுபவர்கள், கரோனா தொற்றால் பாதிக்கப்படும்போது அவர்களுக்கு மற்றவர்களைக் காட்டிலும் அதிக ரிஸ்க் இருப்பது இறந்தோரின் பின்னணியை ஆராயும்போது தெரிய வருகிறது.
சேலம் மாவட்டத்தில் இதுவரை 2,295 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தவிர, வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 326 பேருக்கும் இந்நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து 1,840 பேர் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். தற்போது 721 கரோனா நோயாளிகள் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
மாவட்டம் முழுவதும் கரோனா சளி தடவல் பரிசோதனைகள் 78,312 பேருக்கு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் மாவட்டம் முழுவதும் 1,208 பேருக்கு சளி தடவல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உள்ளன.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்திலேயே கரோனா தொற்றுக்கு 36 நாளில் 25 பேர் பலியாகி இருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனினும், மாவட்ட நிர்வாகம் தரப்பில், கரோனாவால் இதுவரை 18 பேர் மட்டுமே இறந்ததாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.