புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் மறமடக்கி சேர்வைக்காரன் குடியிருப்பு விவசாய கூலி ஜோதி மகள் அசிதா(18). அப்பா இறந்து சில ஆண்டுகள் ஆனது. தாயின் அரவணைப்பில் இருந்து பள்ளிப்படிப்பை இந்த ஆண்டு முடித்துவிட்டு கல்லூரி படிப்புக்காக காத்திருந்தவருக்கு திடீர் காய்ச்சல். கூலி வேலைக்கு சென்று குழந்தைகளை காப்பாற்றி வந்த தாயால் மகளின் காய்ச்சலுக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் தான் சிகிச்சை கொடுக்க முடிந்தது. நாளுக்கு நாள் காய்ச்சல் அதிகமாகி அசிதா சுய நினைவு இழக்கும் நிலைக்கு வந்த நிலையில் உறவினர்களின் துணையுடன் திருச்சியில் உள்ள நியூரோ ஒன் தனியார் மருத்துமனையில் சேர்த்தனர். அங்கே பல சோதனைகள் செய்யப்பட்ட நிலையில் மூளைக்காய்ச்சலுடன் 'மைஸ்தினியா' என்ற வைரஸ் தாக்குதலும் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. உடலில் உள்ள ரத்தம் மாற்றப்பட்டு அதற்கான உயர் சிகிச்சை அளிக்க ரூ 5 லட்சம் வரை செலவாகும் என்று மருத்துவமனை நிர்வாகம் சொன்னதால் மனமுடைந்து போனார்கள் உறவினர்கள்.
எங்கோ போவோம் ரூ 5 லட்சத்திற்கு என்று புலம்பத் தொடங்கினார்கள். தகவல் அறிந்த இளைஞர்களும் உறவினர்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வந்தாலும் அந்த இலக்கை எட்ட முடியவில்லை. சமூக வலைதளங்கள் மூலம் நிதி திரட்டும் முயற்சியில் இளைஞர்கள் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் தகவல் அறிந்த நாம் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கவனத்திற்கு கொண்டு சென்றோம். அப்போது பேசிய அவரது உதவியாளர் சீனிவாசன் அமைச்சர் தேவையான உதவிகளை செய்ய சொல்லி இருக்கிறார் என்ற நம்பிக்கையை கூறினார். ஆபத்தான நிலையில் உள்ள மாணவியின் உயிரை காக்க பணம் தடையாக இருக்கும் நேரத்தில் அமைச்சர் உதவி செய்வதாக சொல்லி இருப்பது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. சமூக வலைதளங்களின் மூலம் நிதி வழங்க நினைப்பவர்கள் வழங்கி அந்த ஏழை மாணவியின் உயிர் காக்க வேண்டும் என்பதே நம் விருப்பம். அனைவரின் உதவியாலும் அசிதா மீண்டும் படிக்கச் செல்ல வேண்டும்.