துணைவேந்தர் நியமனத்தில் தமிழக ஆளுநரின் நடவடிக்கை ஏற்புடையதல்ல என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் 1978ல் துவங்கியது முதல் தொடர்ந்து இந்த பல்கலைக்கழகத்திற்கு தமிழகத்தைச் சார்ந்தவர்களே துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது காலியாக இருந்த துணைவேந்தர் பதவிக்கு, தமிழகத்தைச் சார்ந்த தகுதியான கல்வியாளர்கள் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில் தமிழக ஆளுநர் கர்நாடகத்தைச் சார்ந்த சூரப்பாவை துணைவேந்தர் பதவிக்கு நியமனம் செய்திருப்பது உள்நோக்கம் கொண்டதாகவும், தாங்கள் விரும்பும் ஒருவரை அப்பதவியில் நியமிக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் கருதுவதாகவே தெரிகிறது.
இந்த புதிய நடைமுறை எதிர்காலத்திலும் தமிழகத்தைச் சார்ந்த திறமை வாய்ந்த கல்வியாளர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படும் நிலை ஏற்படுத்தும் என்றே கருத வேண்டியுள்ளது. தமிழக ஆளுநரின் நடவடிக்கை ஏற்புடையதல்ல என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சுட்டிக்காட்டுகிறது.
எனவே, ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சார்ந்த ஒருவரை இப்பதவிக்கு நியமிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.