புதுக்கோட்டை வழியாக மதுரையில் இருந்து தஞ்சை செல்லும் ஒரு அரசுப் பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு தாகம் தீர்த்து வந்தார் நடத்துநர். அதே போல புதுக்கோட்டை நகரில் பிழைப்பிற்காக ஆட்டோ ஓட்டும் அன்வர் ஒரு நாள் வருமானத்தில் ரூ. 60 செலவு செய்து 50 லிட்டர் தண்ணீர் வாங்கி தனது ஆட்டோவில் வைத்துக் கொண்டு பயணிகளுக்கு மட்டுமின்றி சாலையில் செல்வோருக்கும், ஆதரவற்ற முதியவர்களுக்கும் தாகம் தீர்த்து வருகிறார்.
இதைப் பார்க்கும் பொதுமக்கள்.. புதுக்கோட்டையில் தாகம் தீர்க்க எந்தப் பக்கம் திரும்பினாலும் குடிதண்ணீர் குளங்கள் இருந்தது. புதுக்குளம் என்றபெரிய குளமே அதற்காக வெட்டப்பட்டது தான். ஆனால் இன்று அத்தனை குளங்களும் காணாமல் போய்விட்டது. ஆனாலும் அன்வர் மாதிரி சிலர் ஆங்காங்கே தாகம் தீர்த்து வருகிறார்கள் என்கின்றனர்.
புதுக்கோட்டை தெற்கு ராஜ வீதியைச் சேர்ந்தவர் அன்வர். கடந்த 20 ஆண்டுகளாக பயணிகள் ஆட்டோ ஓட்டி வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக தனது ஆட்டோவில் ஓட்டுநர் இருக்கை அருகே கேன் வைத்து தினமும் ஆட்டோவில் பயணிக்கும் பயணிகள் மட்டுமின்றி பொதுமக்களுக்கும் இலவசமாக குடிநீர் கொடுக்கிறார்.
புதுக்கோட்டையில் ஒரு கடையின் ஊழியருக்கு தாகம் தீர்க்க ஆட்டோவை நிறுத்திய அன்னவரிடம் கேட்டோம்.. எப்படி இப்படி என்று. கடந்த சில வருடங்களாக நிலவும் கடும் வறட்சி குடிதண்ணீர் கூட கிடைக்கவில்லை. அதிலும் இந்த வருடம் புயலில் மரங்கள் அதிகமாக சாய்ந்ததால் வெயிலின் தாக்கம் அதிகம். சில ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டோவில் பயணம் செய்யும்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டோர் குடிக்க தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டதை கண்டேன். அதுமட்டுமின்றி ஆவசரத்தில் ஆட்டோவில் ஏறியவர்கள் தண்ணீர் எடுக்காமல் வந்து குடிநீர் இல்லாமல் தாகத்துடன் சிரமப்படுகின்றனர். பலர், தாகம் அதிகமாகி ஆட்டோவிலேயே மயக்கம் அடைந்தத்தையும் பார்த்தேன். அதே போல குழந்தைகளும் தண்ணீர் கேட்டு அழுவார்கள். இது எல்லாம் என் மனதை பாதித்தது.
அதன் பிறகு தான் நாம் ஏன் பயணிகளுக்கு தண்ணீர் கொடுக்க கூடாது என்று முடிவு செய்தேன். ஏன் இப்படி என்று யோசித்தேன். தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்ட பிறகு பெரும்பாலும் குடிநீரை இலவசமாக வழங்குவது குறைந்து வருகிறது. இதனால் வழிப்போக்கர்கள் குடிநீரின்றி பாதிக்கப்படுவதை அறிந்தேன். அதன்பிறகுதான் 3 வருடத்திற்கு முன்ர் எனது ஆட்டோவில் 25 லிட்டர் கேனை பொருத்தி தினமும் ரூ.60 -க்கு 50 லிட்டர் குடிதண்ணீர் வாங்கி இலவசமாக அனைவருக்கும் கொடுக்கிறேன்.
ஆட்டோவில் வரும் பயணிகள் மட்டுமின்றி ஆட்டோ நிறுத்தப்பட்டிருக்கும் இடத்திலும், பொதுமக்கள் குவளை மூலம் குடிநீர் பிடித்து பயன்படுத்துகின்றனர். சாலையில் நடந்து செல்லும் முதியவர்களுக்கு நானே ஆட்டோவை நிறுத்தி தண்ணீர் கொடுத்து செல்வது வழக்கம். எனக்கு ஒரு நாளைக்கு சுமார் ரூ.400 - 500 வருமானம் கிடைக்கும் அதில் 60 ரூயாக்கு தண்ணீர்க்காக ஒதுக்கி விடுவேன். இப்படி ஒரு நாளைக்கு 100 பேருக்காவது தாகம் தீர்ப்பதால் என் மனம் மகிழ்ச்சியடைகிறது. இந்த சேவை என் வாழ்நாள் வரை தொடர்ந்து செய்வேன் என்றார்.
a