Skip to main content

தனியார் நிறுவனங்களின் தண்ணீர் கொள்ளையை தடுத்து நிறுத்து!புதுகையில் ஆர்ப்பாட்டம்

Published on 29/05/2019 | Edited on 29/05/2019

 


புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மழையின்மை, நிலத்தடி நீர் பற்றாக்குறை போன்ற காரணங்களால் குடிநீர் தட்டுப்பாடு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். பெரும்பகுதியான மக்கள் தங்களுக்குத் தேவையான குடிநீரைப் பெருவதற்கே தினந்தோறும் அதிகப்படியான நேரத்தையும் பணத்தையும் செலவிட வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி சில தனியார் நிறுவனங்கள் தண்ணீர் விற்பனையில் கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றனர்.

 

a

 

எனவே, குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் நிறுவனங்களின் தண்ணீர் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். காவிரி கூட்டுக்குடிநீர்த் திட்டத்தை புதுக்கோட்டை நகரத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். மாவட்டம் முழுவதும் பழுதடைந்து குடிநீர் வினியோகத்திற்கு தடையாக இருக்கும் மேல்நிலை மற்றும் சிறுமின்விசை நீர்த்தேக்கத் தொட்டி மின் மோட்டார்களை சரிசெய்து குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. 

 

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்தக்தின் சார்பில் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய பேரணிக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.சுசிலா தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் எஸ்.பாண்டிச் செல்வி வரவேற்றார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் டி.சலோமி உரையாற்றினார். அண்ணாசிலை அருகே பேரணி நிறைவடைந்து அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் கோரிக்கை அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது.
                

சார்ந்த செய்திகள்