புதுக்கோட்டை நகரையொட்டியுள்ள திருக்கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் புதுக்கோட்டை தெற்கு ராஜவீதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 29ந் தேதி முதல் மாரிமுத்துவை காணவில்லை. இந்த நிலையில் அவரது கார் மட்டும் திருவரங்குளம் வளநாடு காட்டுப்பகுதியில் எரிந்து கிடந்தது.
காருக்குள் சில வளையல்களும் எரிந்து கிடந்தது. முதலில் யாருடைய கார் என்பது தெரியாமல் இருந்தது. பிறகு விசாரணையில் அந்த கார் மாரிமுத்துவின் கார்தான் என்பது அடையாளம் காணப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திவந்தனர். எரிந்து கிடந்த கார் வங்கி ஊழியர் மாரிமுத்துவுக்கு சொந்தமானது என தெரியவந்தது.
போலீசார் கார் எரிந்தது பற்றி பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர். மேலும் அவர் வேலை செய்த வங்கியிலும் போலிசார் விசாரணை செய்துவந்த நிலையில் வாடிக்கையாளர்களை அனுமதிக்காமல் வங்கியில் அதிகாரிகள் ஆய்வுகள் செய்தனர். நகை, பணம் பற்றிய ஆய்வுகள் நடந்துள்ளது.
இந்நிலையில் வங்கி ஊழியர் மாரிமுத்துவின் மனைவி ராணி தனது கணவர் கடந்த 29 ந் தேதி முதல் காணவில்லை என்று கணேஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வங்கி ஊழியர் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடன் தொல்லையா அல்லது வங்கியில் ஏதேனும் பிரச்சனையால் காரை எரித்துவிட்டு தலைமறைவாகி உள்ளாரா? அல்லது மாரிமுத்துவை யாரேனும் கடத்தி இருப்பார்களா என்ற கோணத்தில் 3 தனிப்படைகள் அமைத்து போலிசார் தேடி வருகின்றனர்.