சென்னையில் அரசுப் பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், ''முதலில் தமிழகத்தின் பள்ளிக்கல்வித்துறை முறையாக தான் நடைபெறுகிறதா என்று தெரியவில்லை. பல இடங்களில் மாணவர்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்ய வைக்கப்படுகிறார்கள். போலி என்.எஸ்.எஸ் முகாம்கள் நடத்தி பாலியல் குற்றங்கள் வரை நடைபெற்றிருக்கிறது. ஜாதிய வேற்றுமைகளால் மாணவர்கள் தென்பகுதியில் தாக்கப்படுகிறார்கள். பாத பூஜை செய்ததற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறார். ஆசிரியர்களுக்கு பாத பூஜை செய்வது, மரியாதை செய்வது நமது கலாச்சாரத்தில் ஒன்றியது. இதை எப்படி செய்ய முடியும் என்று கேட்கிறார். அதேபோல் சொற்பொழிவு நடந்ததற்கு பள்ளி தலைமை ஆசிரியரை மாற்றம் செய்திருக்கிறார்கள்.
பணியிடமாற்றம் அவரை செய்வதைவிட பள்ளிக் கல்வித்துறை அமைச்சரை தான் பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும். சொற்பொழிவு நடத்த அனுமதி பெற்று இருக்கிறார்கள். அதற்கு பின்பு தான் அங்கு நிகழ்வு நடைபெற்றிருக்கிறது. இதையெல்லாம் வைத்துக் கொண்டு எதை எடுத்தாலும் ஆர்.எஸ்.எஸ் உடன் இணைப்பது தவறானது. ஆர்எஸ்எஸ் ஒரு மாபெரும் சேவை இயக்கம். ஒரு மாற்று அரசியல் கட்சி சார்ந்த குடும்பத்தைச் சேர்ந்த நான் ஆர்எஸ்எஸ்-ன் சேவையை பார்த்து தான் பாஜகவில் ஈடுபடுத்திக் கொண்டேன். எதை எடுத்தாலும் ஆர்எஸ்எஸ் என்ற தோற்றத்தை உருவாக்குவதும் கண்டிக்கத்தக்கது. அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரை பணியிட மாற்றம் செய்தது கண்டிக்கத்தக்கது'' என்றார்.