Skip to main content

புகழேந்தியை நீக்கிய விவகாரம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

Published on 24/08/2021 | Edited on 24/08/2021

 

Pukahendi case: Special court orders OPS-EPS appellant

 

சட்டமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்பதால் அவதூறு வழக்கில் ஆஜராவதற்கு விலக்கு கோரிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் மனுக்களைத் தள்ளுபடி செய்த சிறப்பு நீதிமன்றம், செப்டம்பர் 14ஆம் தேதி இருவரும் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. அதிமுகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த பெங்களூரு புகழேந்தியை கட்சியிலிருந்து நீக்கி ஜூன் 14ஆம் தேதி ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்ச்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டனர்.

 

அதில் கட்சியின் கோட்பாடுகளுக்கு எதிராகவும், கட்சி விரோத செயல்பாடுகளுக்கும் காரணமாக இருந்ததால் நீக்கம் என கூறப்பட்டிருந்தது. இது தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்கக் கோரி புகழேந்தி, சென்னை எம்.பி. - எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவரும் இன்று (24.08.2021) ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்த வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அலீசியா முன்பு விசாரணைக்கு வந்தபோது, அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரகாஷ், சட்டசபை நடந்துகொண்டிருப்பதால் நேரில் ஆஜராக முடியவில்லை எனவும் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் என்பதால் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

அதேபோல வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்துள்ள மனு உயர் நீதிமன்றத்தில் வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வர உள்ளதாகவும் தெரிவித்தார். மனுதாரர் புகழேந்தி தரப்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி ஆஜரானார். ஆஜராகாததற்கான காரணம் நியாயமானதுதான் என தெரிவித்த நீதிபதி, எனினும் வழக்கின் முதல் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டியது கட்டாயம் என்பதால் நேரில் ஆஜராகுவதற்கு விலக்கு அளிக்கக் கோரி இருவரும் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் இருவரையும் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்