Skip to main content

நான் டாக்டர் 515 கணேசன் வந்திருக்கிறேன்... நீலகிரி மக்களுக்கு உதவ முடிஞ்சத கொடுங்க...

Published on 13/08/2019 | Edited on 13/08/2019

அடித்தட்டு மக்களுக்கு சேவை செய்தே டாக்டர் பட்டம் வாங்கிய முதியவர் டாக்டர் ஆலங்குடி 515 கணேசன். இந்தியாவில் எங்கே இயற்கை சீற்றத்தால் மக்கள் அவதிப்பட்டாலும் அவர்களுக்கு உதவ தனது அம்பாசிட்டர் காரை எடுத்துக் கொண்டு ஊரு ஊருக்கு சென்று நிவாரணம் திரட்டி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக கொடுப்பது அவர் பழக்கம். கஜா புயலில் தான் குடியிருந்த வீட்டின் கூரைகள் காற்றில் பறந்துவிட்ட போதும் ஒட்டுமொத்த உடமைகளும் மழையோடு போன போதும் கூட தளராமல் தன் சொந்த மாவட்ட மக்களுக்கு உதவ கரூர் பக்கம் காரோடு சென்றவரை பாராட்டி ராகவா லாரன்ஸ் சொந்த செலவில் வீடுகட்டிக் கொடுத்தார்.

 

I am  Dr. 515 Ganesan ... please help the Nilgiris ...

 


கர்நாடக பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்தது. தோழர் நல்லக்கண்ணு கொத்தமங்கலம் விழா பொதுமேடையில் அழைத்து பாராட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இந்த சமூக சேகவர் 515 கணேசன்தான் இப்போது நீலகிரி மாவட்ட மக்களுக்கு உதவ உண்டியலோடு கிளம்பிவிட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கடைவீதியில் தனது காரோடு வந்தவர் துணைக்கு ஒருவரையும் அழைத்து வந்தார். ஒரு கையில் கார் ஸ்டியரிங், மறு கையில் மைக்.. மெதுவாக நகர்ந்த காரில் இருந்து பேசுகிறார்.. 5200 சடலங்களை இலவசமாக தூக்கியே டாக்டர் பட்டம் வாங்கின ஆலங்குடி 515 கணேசன் உண்டியலோட வந்திருக்கிறேன். புயலில் நீங்களும் பாதிக்கப்பட்டீங்க தெரியும். இருந்தாலும் உங்களிடம் இருக்கிற ஒரு ரூபாய் முதல் எவ்வளவு போட முடியுமோ உதவி செய்யுங்கள். நம்ம உறவுகள் நீலகிரி மழையில் நனைந்து கொண்டிருக்கிறார்கள். மாற்று உடையில்லை உதவுங்கள் என்று விளம்பரம் செய்து கொண்டே போக மற்றவர் ஒரு உண்டியலை முன்னால் கொண்டு செல்ல காரில் ஒரு உண்டியல் வைத்துக் கொண்டார். சென்ற இடமெல்லாம் கையில் இருந்ததை கொடுத்தார்கள்.

 

I am  Dr. 515 Ganesan ... please help the Nilgiris ...


எத்தனையோ பேர் இப்படி உதவிகள் செய்றதா சொல்லி வசூல் செஞ்சு ஏமாத்திட்டு போறாங்க. ஆனா 515 கணேசன்கிட்ட கொடுத்தால் சரியா போய் சேரும். அதனாலதான் அவர் வருவாருனு காத்திருந்து எங்களால் முடிஞ்சத கொடுக்கிறோம் என்றனர் நிவாரண உண்டியலில் பணம் போட்டவர்கள்.

டாக்டர் 515 கணேசனோ.. கோயில் கட்ற இனத்தில பிறந்தாலும் ஏழைகள் செத்தால் தூக்கி போக மறுக்கும்போது வேடிக்கை பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியுமா? அதனாலதான் 18 வயசுல 515 நம்பர் கார் வாங்கி ஏழைகள், ஆதரவற்றவர்களின் சடலங்களையும், பிரசவத்துக்கு கர்ப்பிணிகளையும் இலவசமாக ஏற்றினேன். இதுவரை 5200 சடலங்களை ஏற்றியாச்சு. 100 க்கும் மேற்பட்ட சடலங்களை நானே அடக்கமும் செஞ்சுட்டேன். ஆயிரம் கர்ப்பிணிகளை ஏற்றி நல்லபடியா பிரசவம் நடந்திருக்கு. டீசலுக்காக பழைய இரும்பு வியாபாரம் செய்வேன். 

இந்தியாவுல எங்கே இயற்கை பாதிப்புன்னாலும் நிவாரணம் வசூல் பண்ணி நேரில் கொண்டு போய் கொடுப்பேன். சுனாமி, தானே, வர்தா புயல் இப்படி எல்லாத்துக்கு கொடுத்தாச்சு. கடைசியல கஜா புயல்ல என் வீடே காணாம போச்சு. முடங்கி கிடக்க முடியுமா? காருக்குள்ள குடியிருந்தோம். இந்தியாவுல எங்கே பாதிப்புன்னாலும் உதவி செய்ய நம்ம மாவட்ட மக்களுக்கு உதவனுமேன்னு கரூர் பக்கம் போய் நிவாரணம் திரட்டி வந்து கொஞ்சம் பேருக்கு கொடுத்தேன். என் நிலமையை பார்த்துட்டுதான் அய்யா ராகவா லாரன்ஸ் எனக்கு தார்சு வீடு கட்டிக் கொடுத்தார். அவரை எப்பவும் மறக்க மாட்டேன்.

பிணம் தூக்குனதுக்காக டாக்டர் பட்டம் வாங்குன முதல் ஆள் நானாக தான் இருக்க முடியும். இப்ப நீலகிரி மாவட்டத்தில் கனமழையால மண்சரிவு ஏற்பட்டு வீடு வாசலை இழந்து நிர்கதியா நிற்கும் நம்ம உறவுகளுக்கு நம்மால் இயன்ற சிறு  உதவிகள் செய்யும் எண்ணத்தோடதான் புயலில் பாதித்த மக்களிடம் வந்தேன். எல்லாரும் நிவாரணம் கொடுக்கிறார்கள். விரைவில் நீலகிரி கொண்டு போய் பாதிக்கப்பட்டுள்ள நம் உறவுகளுக்கு கொடுப்பேன் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்