"காவல் நிலையங்களும்... உயிரிழப்புகளும்..!" என்ற தலைப்பில் விவாதங்கள் தொடங்கியுள்ளது. சாத்தான்குளம் பிரச்சனை முடிவுக்கு வரும் முன்பே அடுத்து அறந்தாங்கி காவல் நிலையம் முன்பு தீ குளித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எல்.என்.புரம் காந்தி நகர் பாண்டி என்கிற ராஜேந்திரன் பல்வேறு திருட்டு வழக்குகளில் சிறையில் உள்ளார். ராஜேந்திரன் திருடிக் கொண்டு வந்து கொடுத்த தங்க நகைகளை அவரது மனைவி செல்வி (40) விற்பனை செய்துள்ளதாக போலீசார் அவரது வீட்டிற்குச் சென்று விசாரணை செய்ததுடன் காவல் நிலையம் வரச் சொல்லிவிட்டு வந்துள்ளனர்.
ஜூன் 7- ஆம் தேதி விசாரணைக்காக காவல் நிலையம் வந்த செல்வி காவல் நிலையம் முன்பு கையோடு கொண்டு வந்த மண்ணெண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டு விசாரணை என்ற பெயரில் தன்னை அடிக்கடி கொடுமை செய்வதாகக் கூறியுள்ளார்.
தீ எரிவதைப் பார்த்த போலீசார் தீயை அணைத்துவிட்டு 60 சதவீதம் தீ காயத்துடன் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அந்தப் பெண்ணுக்கு மருத்துவமனையில் மருத்துவர்கள் இரண்டு வாரங்களாக தீவிர சிகிச்சை அளித்து நிலையில், சிகிச்சை பலினின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கணவன் சிறையில், குழந்தைகள் வீட்டில் தாய் உயிர் நீத்தார்.
இந்தச் சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் நிலையங்களில் தொடர்ந்து இப்படியான சம்பவங்கள் நடப்பதால் பொதுமக்களுக்கும் போலீசாருக்குமான இடைவெளி அதிகரித்து வருகிறது.