கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 29ஆம் தேதி நடக்க இருக்கிறது. மக்கள் தங்களது வீடுகள், கோவில்களில் நூற்றுக்கணக்கான விளக்குகளை ஏற்றி வழிபடுவது வழக்கமானது. ஒவ்வொரு வருடமும் புதிய மண் விளக்குகளுக்கான தேவை அதிகரிக்கிறது.
இந்தத் தீபத்திருவிழா விற்பனைக்காக, ஈரோட்டில் பச்சபாளி, கொல்லம்பாளையம், நஞ்சை, ஊத்துக்குளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மண் விளக்கு உற்பத்தி செய்யப்படுவது வழக்கம். இதில், கொல்லம்பாளளையம், ஊத்துக்குளி பகுதியில் இவ்வாண்டு உற்பத்தி செய்வோர், கரோனா காலத்தில் வாழ வழியில்லாமல் வெளியூருக்கு இடம்பெயர்ந்து சென்றுவிட்டனர்.
பச்சபாளி என்கிற ஒரு இடத்தில் மட்டும், பாரம்பரியமாக விளக்கு உற்பத்தி செய்யும் சிலர், இதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பச்சபாளி மண் விளக்கு உற்பத்தியாளர் ஒருவர் கூறும்போது, “கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு ஒரு மாதம் முன்பே, ஆர்டர்கள் குவியும். ஆனால், இப்போது அப்படியெல்லாம் இல்லை. மூலப்பொருள் சரிவர கிடைப்பதில்லை. மூலப்பொருள் கிடைத்தாலும், எங்களின் உழைப்புக்கு ஏற்ற கூலி கிடைப்பதில்லை. தொடர் மழை, பனிப்பொழிவு உள்ளிட்ட காரணங்களால், மண்ணைப் பதப்படுத்தி சக்கரத்தில் ஏற்ற முடியவில்லை. மழை இல்லாமல் வெயில் அடிக்கும் நேரத்தில் மட்டுமே, சிறிய அளவில், மண் விளக்கு உற்பத்தி செய்யப்படுகிறது.
மூலப்பொருள், மின்சாரக் கட்டணம், ஆள் கூலி இவை அனைத்தும் சேர்ந்து, கணக்கு பார்த்தால் எதுவும் தேறாது. இருந்தாலும், பாரம்பரியத் தொழில் என்பதால், அதைவிடாமல் செய்துவருகிறோம். நூறு எண்ணிக்கை கொண்ட சிறிய தீப விளக்கு, 'ஒரு விளக்கு ஒரு ரூபாய்' என்ற கணக்கில் 100 ரூபாய்க்குத்தான் விற்பனை செய்கிறோம்” எனத் தெரிவித்தார்.
ஒளி ஏற்றும் விளக்கை உற்பத்தி செய்வோர் வாழ்வில் ஒளி இல்லை!