![CM MK Stalin tasted the dark shop halwa](http://image.nakkheeran.in/cdn/farfuture/TrvxLsrY44LOicUPOTEGRswWewZu5wcA9XXS1vAMNVw/1738895641/sites/default/files/inline-images/tvl-mks-halwa-art.jpg)
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கள ஆய்வு மற்றும் நலத்திட்ட உதவிகளைத் தொடங்கி வைப்பதற்காகத் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாகத் திருநெல்வேலி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த கள ஆய்வுக்காகத் திருநெல்வேலி சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நேற்று (06.02.2025) பொதுமக்கள் மற்றும் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை, திருநெல்வேலியில் பல ஆண்டுகளாகப் புகழுடன் விளங்கும் இருட்டுக்கடை அல்வா கடைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திடீரெனச் சென்றார். அங்கிருந்த கடை உரிமையாளரிடம் உரையாடினார். அப்போது கடை ஊழியர்களைக் கண்டு அல்வா தயாரிப்பு முறை, விற்பனை குறித்து விசாரித்து அறிந்து கொண்டார். இதனையடுத்து அவர் அல்வா வாங்கி சாப்பிட்டார். அப்போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு எனப் பலரும் உடன் இருந்தனர். ஆகியோர் உள்ளனர். சற்றும் எதிர்பாராமல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இருட்டுக்கடை அல்வா கடைக்கு வந்து தங்களுடன் பேசியது இன்ப அதிர்ச்சியாக இருந்தது என்று அல்வாக் கடையினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
அத்துடன் அந்தக் கடையில் கூடியிருந்த பொதுமக்களும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைக் கண்டதும் ஆச்சரியம் கொண்டனர். அதோடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இவ்வளவு எளிமையாக எல்லோருடனும் நெருங்கி வந்து பழகுவது பெருத்த சந்தோசத்தை எங்களுக்கு ஏற்படுத்தியது என்றும் கூறி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைப் பாராட்டினர். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “எப்போது நெல்லை வந்தாலும்… திருநெல்வேலி அல்வா” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது தொடர்பான புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்துள்ளார்.