கடந்த ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலோடு ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. அதன்படி ஆந்திராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடு வெற்றி பெற்றார். இதனையடுத்து ஆந்திர முதல்வராக கடந்த ஜுன் மாதம் 12ஆம் தேதி (12.06.2024) பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் ஆந்திரா மாநிலம் அமராவதியில் நேற்று (06.02.2025) அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது மாநில அரசில் சிறந்த முறையில் பணியாற்றி, துறை சார்ந்த கோப்புகளைச் சரிபார்த்து, உடனுக்குடன் அதற்கான பணிகளை முடிக்கும் சிறந்த அமைச்சர்களின் பட்டியலை முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டார். அதாவது ஆட்சி அமைத்துக் கடந்த 9 மாதங்களாகச் சிறப்பாக பணியாற்றிய அமைச்சர்களின் பட்டியலை அவர் வெளியிட்டார்.
அதன்படி, முதல் இடத்தை அமைச்சர் என்.எம். பரூக் இடம்பெற்றார். 6ஆம் இடத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளார். 8வது இடத்தில் அவரது மகனும் அமைச்சருமான நர லோகேஷ் உள்ளார். 10வது இடத்தில் துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளார். கடைசி இடத்தில் அமைச்சர் சுபாஷ் உள்ளார். முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் பொது நிர்வாகத் துறை, சட்டம் மற்றும் ஒழுங்கு, பொது நிறுவனங்கள் மற்றும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத அனைத்து துறைகளின் இலாகாக்கள் உள்ளன.
துணை முதல்வர் பவன் கல்யாண், பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சி, ஊரக நீர் வழங்கல், சுற்றுச்சூழல் வன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இலாகாவைக் கொண்டுள்ளார். மனித வள மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் துறைகளின் இலாகாக்கள் உள்ளன. என்.எம். பரூக் சட்டம், நீதி மற்றும் சிறுபான்மையினர் நலன் துறைகளின் இலாகாக்கள் உள்ளன. தொழிலாளர், தொழிற்சாலைகள், கொதிகலன்கள் மற்றும் காப்பீட்டு மருத்துவ சேவைகள் துறை இலாகாக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.