விழுப்புரம் அருகே அரசுப்பணி வாங்கித் தருவதாகக் கூறி பல லட்சம் மோசடி செய்த பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுக்கா ஒதயநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன், ஒரு தனியார் கல்லூரியில் உணவக மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். இவருடன் கொண்டியாங்குப்பத்தைச் சேர்ந்த ஞானவேல் என்பவர் நண்பராக அறிமுகமாகி பழகியுள்ளார். ஞானவேல் புதுச்சேரியில் உள்ள அரசுப் பொதுப்பணித்துறை வாட்டர் டேங்க் போர்டு அலுவலகத்தில் ஆபரேட்டராக பணிபுரிந்து வருவதாகக் கூறி அறிமுகமாகியுள்ளார். அவரிடம் தமக்கு நெருங்கிய நண்பரான கண்ட மங்கலத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் பலருக்கு அரசு வேலை வாங்கித் தருகிறார், உங்களுக்கு அரசுப் பணி தேவை என்றால் விழுப்புரத்தில் அல்லது சென்னையில் வேலை வாங்கித் தருவதற்கு சேகர் தயாராக இருக்கிறார் என்று ஆசைவார்த்தைக் கூறியுள்ளார்.
இதை நம்பிய சரவணன் 2017 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி எதிரில் வைத்து ஞானவேல் முன்னிலையில் சேகரிடம் ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுத்துள்ளார். தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு அடுத்தடுத்த தவணையாக 6 லட்ச ரூபாய் வரை பணம் கொடுத்துள்ளார்.
இதேபோன்று ஞானவேல் யுவராஜ் உதயகுமார் ராம்கி ஆகியோருக்கும் வேலை வாங்கித் தருவதாக அனைவரிடமும் சேர்த்து 16 லட்சத்து அறுபதினாயிரம் பணம் பெற்றுள்ளார் சேகர் பிறகு இவரிடம் வேலை சம்பந்தமாகக் கேட்டபோது சரியான பதில் அளிக்கவில்லை. நாட்கள் செல்லச் செல்ல பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டுள்ளோம் என்று சந்தேகம் ஏற்பட்டதால் அனைவரும் பணத்தைத் திருப்பித் தருமாறு சேகரிடம் கேட்டுள்ளனர்.
பணம் தராமல் ஏமாற்றி வந்துள்ளார் சேகர். இதையடுத்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்துள்ளனர் புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் சேகர் மொத்த பணத்திற்கான தொகை முழுவதையும் எழுதிக் காசோலையாகக் கொடுத்துள்ளார். அந்தக் காசோலை வங்கிக்குச் சென்று பணம் இல்லை என்று திரும்பி வந்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த சரவணன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சேகரிடம் பணம் கேட்டதற்கு சேகர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணனிடம் புகார் மனு அளிக்கப்பட்டது அந்தப் புகாரின் அடிப்படையில் தனிப்படை போலீசார் சேகரை தேடிவந்தனர். சேகர் கண்டமங்கலம் ரயில்வே பகுதியில் சுற்றித் திரிந்ததாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சேகரை கைது செய்து விக்கிரவாண்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு உதாரணம் என்கிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.