ரிசர்வ் வங்கி, மற்ற வணிக வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டியே ரெப்போ வட்டி விகிதம் ஆகும். இந்நிலையில் வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி ரெப்போ வட்டி விகிதம் 6.50 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளன.
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குறித்த அறிக்கையை ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா வெளியிட்டார். இதனையடுத்து அவர் பேசுகையில், “ரெப்போ வட்டி விகிதத்தை 6.50 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாகக் குறைக்க பணவியல் கொள்கைக் குழு ஒருமனதாக முடிவு செய்துள்ளது. நாட்டில் பணவீக்கம் குறைந்துள்ளது. இலக்குடன் நீடித்த பணவீக்கத்தைச் சீரமைப்பதில் சந்தேகத்திற்கு இடமின்றி கவனம் செலுத்தவும் முடிவு செய்தது” எனத் தெரிவித்தார்.
ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு காரணமாக வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதங்களும் குறைய வாய்ப்பு உள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 11 முறை ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படாத நிலையில் தற்போது வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்கோத்ரா பதவியேற்ற பிறகு முதல் முறையாக ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.