புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் குடிநீருக்கு பயன்படுத்தும் நீர்த்தேக்கத் தொட்டியில் மர்ம நபர் மனிதக்கழிவைக் கலந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஊராட்சி மன்றத் தலைவர் கொடுத்த புகாரின் பேரில் வெள்ளனூர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இது தொடர்பாக கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை இந்த சம்பவம் நடந்த கிராமத்திற்குச் சென்று விசாரணை செய்த பிறகு, குடிநீரில் மனிதக்கழிவை கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
இந்த நிலையில், அந்த கிராமத்திற்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, எஸ்.பி வந்திதா பாண்டே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து அமைச்சர் மெய்யநாதன் நேரில் சென்று ஆய்வு செய்த பிறகு, "மனிதக்கழிவு கலக்கப்பட்ட குடிநீர்த் தொட்டிக்குப் பதிலாகப் புதிய குடிநீர்த் தொட்டி அமைக்கப்படும்" என்றார். இதனைத் தொடர்ந்து சில நாட்களில் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கும் பொருட்டு புதிய தண்ணீர் குழாய்கள் அமைக்கப்பட்ட நிலையில், இலுப்பூர் கோட்டாட்சியர் குழந்தைசாமி தலைமையில் கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை புதிய குடிநீர் குழாய்களைத் திறந்து வைத்தார்.
நேற்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துப் பேசும்போது, "தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம். உடனடியாக தண்ணீர் குழாய்கள் அமைக்கப்பட்டு தண்ணீர் வழங்கப்படுகிறது. மேலும், புதியதாக தண்ணீர் தொட்டி அமைக்கப்பட உள்ளது" என்றார். இந்நிலையில், பழைய தொட்டியில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில் இன்று வேங்கைவயலில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கான கட்டுமானப் பொருட்கள் விரைவாக கொண்டுவரப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் தண்ணீர் தொட்டி அமைக்கும் பணிகள் முடிவடையும் என்று அப்பகுதி மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.