புதுக்கோட்டையில் துப்பாக்கிச் சுடுவதற்கான பிரதான பயிற்சி மையம் உள்ளது. ராணுவ வீரர்கள், காவல்துறையினர் உள்பட இங்கு வந்து பயிற்சி எடுத்து வருகிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை, அம்மாச்சத்திரம் பகுதியில் மலைகள் சூழ்ந்த காட்டுப் பகுதியில் உள்ள துப்பாக்கி பயிற்சி மையத்தில் தற்போது மத்திய தொழில் படை பிரிவினர் துப்பாக்கிச் சுடும் பயிற்சி பெற்று வருகின்றனர். இன்றும், காலையில் பயிற்சி நடந்துக் கொண்டிருந்தது.
அப்போது அருகில் உள்ள கொத்தமங்கலத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கலைச்செல்வன் மகன் புகழேந்தி (வயது 11) என்ற சிறுவன் நார்த்தாமலையில் உள்ள தனது தாத்தா முத்து வீட்டில் இருந்த போது துப்பாக்கி பயிற்சி மையத்தில் இருந்து வெளியேறிய துப்பாக்கி குண்டு புகழேந்தி தலையில் பாய்ந்தாகக் கூறிய உறவினர்கள் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு தயாராக இருந்த மருத்துவக் குழுவினர் மூளை பகுதியில் துப்பாக்கிக் குண்டு ஊடுருவி இருப்பதால், அந்த குண்டை அகற்றுவதற்காக போராடி வருகின்றனர். இந்த நிலையில் பயிற்சி மையத்தை நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். அதிகாரிகளின் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு பிறகு சாலை மறியியல் கைவிடப்பட்டதோடு தற்காலிகமாக பயிற்சி மையம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், "மத்திய, மாநில பாதுகாப்பு அதிகாரிகளுக்கான இந்த பயிற்சி மையம் பலத்த பாதுகாப்புடன் இயங்குகிறது. சுற்றிலும் மலைகளும், காடும் உள்ளது. துப்பாக்கி சுடும் பயிற்சி தொடங்கும் போது சிவப்பு கொடி ஏற்றப்படும். அந்த கொடியைப் பார்த்தால் பொதுமக்கள் வெளியே வரமாட்டார்கள்.
இங்கு பயன்படுத்தப்படும் குண்டுகள் ஈயத்தால் உருக்கி செய்யப்பட்டது. சுமார் 2 கி.மீ. தூரம் வரை பாய்ந்து செல்லக்கூடியது. பயிற்சி முடிந்த பிறகு சிவப்பு கொடி இறக்கப்பட்டதும், ஈயக்குண்டுகளை சேகரிக்க பலர் உள்ளே செல்வது வழக்கமாக உள்ளது. அதை நினைத்து பயிற்சியின் போது இந்த சிறுவன் சென்று இருக்கலாமா?" என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.