மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து எதிர்கட்சிகளும் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர். பல்வேறு ஊர்களில் பந்தல் அமைத்து தொடர் காத்திருப்பு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
மற்றொரு பக்கம் மாவட்டம் மாவட்டமாக பாஜகவினர் சட்டத்திற்கு ஆதரவாக பேரணிகளும் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடந்து வருகிறது. ஆலங்குடியில் அனைத்துக் கட்சியினர் மற்றும் மதவாத எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் திங்கள்கிழமை மாலை காந்தி பூங்கா திடலில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டனர்.
ஆனால் அருகில் பிள்ளையார் கோயில் இருப்பதை காரணம் காட்டி அனுமதி கொடுக்கவில்லை ஆலங்குடி போலீசார். இந்த தகவல் அறிந்து சென்ற ஆலங்குடி திமுக எம்.எல்.ஏ மெய்யநாதன் சில நாட்களுக்கு முன்பு அதிமுகவுக்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கொடுத்தது போல இதற்கும் அனுமதி வேண்டும் என்று வாக்குவாதம் செய்து அனுமதி பெற்றுக் கொடுத்ததுடன் திருமயம் எம்.எல்.ஏ, திமுக மாவட்ட செயலாளர் (பொறுப்பு) ரகுபதியுடன் கலந்து கொண்டார் மெய்யநாதன்.
இந்தக் கூட்டத்தில் சந்தரவள்ளி, கே.எம்.சரீப் திருமுருகன் காந்தி, உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டதால் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் திரண்டிருந்தனர். அதனால் கூட்டம் அதிகமானதால் பிள்ளையார் கோயில் வாசல் வரை அமர்ந்து பொதுக்கூட்டத்தை பார்த்தனர் இஸ்லாமியர்கள்.
தமிழ்நாட்டில் இந்து- இஸ்லாமியர்கள் எல்லாம் சகோதரர்களே என்பதற்கு இந்த பொதுக்கூட்ட திடலே சான்றாக உள்ளது. உரிமைக்காக ஒன்றிணைந்து குரல் கொடுப்போம் என்றனர்.