போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை இனி பகிரங்கமாக ஏலம் விடப்படும் என காரைக்கால் நகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.
இது தொடர்பாக புதுவை மாநிலம் காரைக்கால் நகராட்சி நிர்வாகம் கூறியுள்ள அறிவிப்பில், "காரைக்கால் நகராட்சிக்கு உட்பட்ட நான்கு பிரதான சாலை, காமராஜர் சாலை, கீழகசகுடி பிரதான சாலை, பாரதியார் சாலை, மாதா கோவில் வீதி, உள்ளிட்ட உட்புற சாலைகளில், கடந்த மாதம் சுற்றித்திரிந்த 125 மாடுகளை நகராட்சி நிர்வாகத்தில் பிடிக்கப்பட்டன. அதன்பிறகு மாடுகளின் உரிமையாளர்களிடம் உறுதிமொழி பத்திரம் பெற்ற பிறகு மூன்று லட்சத்து எழுபத்தி ஐயாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வீதிகளிலும், ஆடுகள் சுற்றி திரிவது இன்னும் தொடர்ந்து வருகிறது. எனவே இனிவரும் காலங்களில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள், பன்றிகள், ஆடுகளை வளர்ப்பவர்கள் மீது தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், அபராத தொகையை பெற்றுக்கொண்டு கால்நடைகளை திருப்பித்தரும் நடவடிக்கையை நிறுத்தி விட்டு கைப்பற்றப்படும் கால்நடைகளை நகராட்சி சட்ட விதிகளின்படி ஏலம் விடப்படும்.
எனவே போக்குவரத்துக்கு இடையூறு உயிரிழப்பு நோய்த்தொற்று போன்றவற்றை தவிர்க்கும் பொருட்டு பொதுமக்கள் தங்களின் கால்நடைகளை அவரது பொறுப்பில் அதற்கான இடங்களில் வைத்துப் பராமரிக்க வேண்டும். நகரின் தூய்மை சுகாதாரத்தில் பொதுமக்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.