புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையராக பாலகிருஷ்ணனை நியமித்தது செல்லாது என துணைநிலை ஆளுநர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி புதுச்சேரி உள்ளாட்சித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது எனக் கூறி, மனுவை விசாரணைக்குப் பட்டியலிட, உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015 மே மாதம் முதல் காலியாக இருந்த புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையர் பதவிக்கு, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணனை நியமிக்க புதுச்சேரி அமைச்சரவை கடந்த ஆண்டு முடிவு செய்து, துணைநிலை ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பியது. ஆனால், மாநில தேர்தல் ஆணையரைத் தேர்வு செய்ய, துணைநிலை ஆளுநர் தேர்வுக்குழுவை நியமித்தார். அதுபோல, மாநிலத் தேர்தல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்று பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டார். அதைப் புதுச்சேரி சட்டமன்றம் நிராகரித்தது.

இதற்கிடையில், பாலகிருஷ்ணன், கடந்த ஆண்டு ஜூலை மாதம் மாநில தேர்தல் ஆணையராக பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையர் பதவிக்கு அகில இந்திய அளவில் விண்ணப்பங்களை வரவேற்று தேர்வு செய்யவேண்டும் என்று மத்திய அரசு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மாநில தேர்தல் ஆணையர் பாலகிருஷ்ணனின் நியமனத்தை ரத்து செய்து துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி புதுச்சேரி உள்ளாட்சித் துறை அமைச்சர் நமச்சிவாயம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, தனது முன்னாள் ஆலோசகர் தேவநீதிதாஸை, மாநிலத் தேர்தல் ஆணையராக நியமிக்கும் வகையில், தகுதி நிபந்தனைகளில் மாற்றங்கள் செய்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், மத்திய அரசின் உத்தரவையும், துணைநிலை ஆளுநரின் உத்தரவையும் சட்டவிரோதமானது, செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த மனு விசாரணைக்கு உகந்ததுதானா என்பது குறித்து விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, அமைச்சர் நமசிவாயத்தின் மனு விசாரணைக்கு உகந்ததுதான் எனக் கூறி, மனுவை விசாரணைக்குப் பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.