ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில் பதவிகளைக் கைப்பற்ற பெட்ரோல் வீசியும், அரிவாளால் தாக்கியும் வன்முறையில் இறங்கியுள்ளது அதிமுக.
ராமநாதபுரம் மாவட்டம் ஊரக உள்ளாட்சி தேர்தலில் ராமநாதபுரம், திருப்புல்லாணி, மண்டபம், ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் திருவாடானை உள்ளிட்ட 5 ஊராட்சி ஒன்றியங்களில் முதற் கட்டமாகவும், கடலாடி, முதுகுளத்தூர், கமுதி, பரமக்குடி, போகலூர் மற்றும் நயினார் கோயில் உள்ளிட்ட 6 ஊராட்சி ஒன்றியங்களிலும் இரண்டாம் கட்டமாகவும் தேர்தல் நடைப்பெற்று முடிந்த நிலையில் தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் களைக்கட்டியுள்ளது. 19 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களை உள்ளடக்கிய கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுக7, பாஜக1, தேமுதிக 1, திமுக 7 மற்றும் சுயேட்சை 3 என தேர்வாகினர். எவருக்கும் பெரும்பான்மை பெறாத நிலையில் தலைவர் பதவிக்கு அதிமுக தரப்பில் அதிமுக-வின் ஒன்றிய செயலாளர் எஸ்.பி.காளிமுத்துவின் மருமகள் முத்துலெட்சுமியும், திமுக தரப்பில் தமிழ்செல்வியும் போட்டியிட்டனர். இது தொடர்பாக இருதரப்புமே கவுன்சிலர்களை தங்கள் பக்கம் இழுக்க பணபேரம் நடத்தி வந்தது.
இந்நிலையில், வார்டு16ல் தேமுதிக சார்பில் வெற்றிப்பெற்ற ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் உதயகுமார் மற்றும் இரு சுயேட்சைகள் உட்பட மூவரும் திமுக தரப்பிற்கு ஆதரவு கொடுத்துள்ளனர். இவர்களையும், திமுக தரப்பு கவுன்சிலர்களையும் தக்க வைக்க சிவகங்கை மாவட்டம் புதுக்குறிச்சியிலுள்ள ராமகிருஷ்ணன் என்பவர் வீட்டில் தங்க வைக்கப்பட்டனர். தகவலறிந்த அதிமுக-வின் ஒன்றிய செயலாளர் எஸ்.பி.காளிமுத்து மதுரையில் உள்ள சில ரவுடிகளை அழைத்துக்கொண்டு 10 கார்களில் சென்று, அவ்வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதலைத் தொடங்கி அங்கிருந்தோர்களை வெட்டி சாய்க்க தொடங்கியிருக்கின்றனர். இதில் கமுதியை சேர்ந்த போஸ், புதுக்குறிச்சியை சேர்ந்த விஜய் ஆகியோரின் தலை மற்றும் கைகள் வெட்டப்பட்டன. இவர்கள் இருவரும் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தேவக்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து எஸ்.பி.காளிமுத்து, திருமூர்த்தி உள்ளிட்ட நால்வரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் கடும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.