Skip to main content

புதுச்சேரி- ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மனித சங்கிலி போராட்டம்!

Published on 17/07/2019 | Edited on 17/07/2019

மத்திய அரசு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 112  இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஆய்வுக்காக வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது. இதற்கு புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் அரசு மற்றும் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

protest


இந்நிலையில் மத்திய அரசு உடனடியாக இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று மாலை மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் அண்ணாசாலையில் உள்ள காமராஜர் சிலையில் இருந்து தொடங்கி பழைய பஸ்நிலையம் அருகே உள்ள அண்ணாசிலை வரை நடந்தது. முதலமைச்சர் நாராயணசாமி போராட்டத்தினை தொடங்கி வைத்தார்.

protest


இந்த மனித சங்கிலி போராட்டத்தில்  காங்கிரஸ் மாநில தலைவர் அமைச்சர் நமச்சிவாயம், மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், தி.மு.க (தெற்கு) மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ, (வடக்கு) மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் மற்றும்   காங்கிரஸ், தி.மு.க, இடதுசாரிகள், ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு கைகோர்த்து நின்றபடி ஹைட் ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.

போரட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி,

protest


“ புதுவை மாநிலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொள்ள மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக மாநில அரசுக்கு கடந்த 2 மாதத்திற்கு முன்பு கடிதம் அனுப்பியுள்ளது. உடனே நான் புதுவை மாநிலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த கூடாது என பிரதமருக்கும், மத்திய பெட்ரோலிய துறை மந்திரிக்கும் கடிதம் அனுப்பினேன். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெட்ரோலியதுறை மந்திரி அலுவலகத்தில் இருந்து எனக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், நாம் அனுப்பிய கடிதத்தை பரிசீலனை செய்வதாக கூறியுள்ளனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் மீனவர்கள், விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கும். சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். புதுவை மாநிலத்தில் தற்போது சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தாத தொழிற்சாலைகள் தொடங்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

 

மாநில அரசு அனுமதி வழங்கினால் மட்டுமே புதுவையில் இந்த திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த முடியும். எந்த விளைவு வந்தாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். புதுவை மாநிலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம். மக்கள் நலன் தான் எங்களுக்கு முக்கியம் எனக்கூறினார். 

 

சார்ந்த செய்திகள்