செங்கல்பட்டில் ராக்கெட் ஏவுதல் நிகழ்ச்சிக்கு வந்த போது கால் தடுமாறி புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் மாமல்லபுரத்தை அடுத்த பட்டிப்புலத்தில் நேற்று காலை 8.15 மணிக்கு ஏவப்பட்டது. 3500 அரசு பள்ளி மாணவர்கள் இணைந்து தயாரித்த 150 செயற்கைக்கோள்களை சுமந்தபடி நேற்று இந்த ராக்கெட் ஏவப்பட்டது.
இந்த ராக்கெட் ஏவுதல் நிகழ்ச்சியில் புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தியா முழுவதும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 3500 அரசு பள்ளி மாணவர்கள் இணைந்து 150 சிறிய ரக செயற்கைக்கோள்களை தயாரித்தனர். வானிலை, கதிர்வீச்சு தன்மை, வளிமண்டல நிலை போன்ற தகவல்களை இந்த செயற்கைக்கோள்கள் மூலம் பெறலாம் எனத் தெரிகிறது. இந்த செயற்கைக்கோள்களை ஒரு ஆண்டுக்கும் மேலாக மாணவர்கள் தயாரித்து வந்தனர்.
கணினி உதவியுடன் மென்பொருளை செயற்கைக்கோளுடன் வடிவமைத்து ஆய்வு செய்வதே அரசு பள்ளி மாணவர்களின் பணியாகும். இந்த செயற்கைக்கோள்கள் வானில் ஏவப்பட்டதன் மூலம் ஒரு செயற்கைக்கோள் புரட்சி ஏற்பட்டுள்ளது என்றும், பொறியாளர்களை பள்ளிகளிலேயே உருவாக்க வேண்டும் என்றும் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
இந்த நிலையில், நிகழ்ச்சிக்கு புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வருகை தந்தார். அவர் ரெட் கார்பெட்டில் நடந்து வந்து கொண்டிருந்த போது கால் தடுமாறி கீழே விழுந்துவிட்டார். உடனே அவரை பாதுகாப்பு அதிகாரிகள் தூக்கிவிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதே போல் கடந்த 2019ஆம் ஆண்டு தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து நெல்லை செல்வதற்காக தமிழிசை காரில் ஏற முயன்றார். அப்போது அவர் தடுக்கி விழுந்தார். உடனே அவர் எழுந்து காரில் புறப்பட்டுச் சென்றார்.
இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற அரிமா சங்கத்தின் மதுரை மண்டல மாநாட்டில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், “நான் கால் இடறி கீழே விழுந்தேன். கீழே விழுவது என்பது இயல்பான ஒன்று. ஆனால், அதை பெரிய செய்தியாக வெளியிட்டதால் என்னிடம் பலரும் நலம் விசாரிக்கிறார்கள். நான் விழுந்து விழுந்து வேலை செய்தால் தொலைக்காட்சியில் வராது. ஆனால், நான் விழுந்தால் அது பெரிய செய்தியாக தொலைக்காட்சிகளில் வருகிறது” எனத் தெரிவித்தார்.
- ஜெர்ரி