அரியலூர் - கடலூர் ஆகிய இரண்டு மாவட்டங்களையும் இணைத்து ஓடுகிறது வெள்ளாறு. இரு மாவட்டங்களிலும் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களும், பணிக்கு சென்று வருபவர்கள் என நூற்றுக்கணக்கானோர் தினமும் இந்த ஆற்றை கடந்து சென்றுவரவேண்டியுள்ளது. மழைக்காலங்களில் இவர்கள் வெள்ளாற்றைக் கடந்து செல்வதற்கு மிகுந்த சிரமம் அடைந்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் இரு மாவட்ட எல்லையில் உள்ள ஓட்டைக்காடு - சௌந்தர சோழபுரம் ஆகிய இரு கிராமங்களுக்கு இடையே மேம்பாலம் கட்டுவதற்காக சுமார் ரூ. 11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அது கிடப்பில் போடப்பட்டது. பாலத்தின் பணிகளை துவக்க கோரி திமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் பொதுநல இயக்கங்கள் போராட்டம் நடத்தின. இதையடுத்து பாலம் கட்டுமான பணி துவக்கப்பட்டு கடந்த 2021 ஜனவரி மாதம் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் இருபுறமும் இணைப்பு சாலை பணிகள் முடிக்கப்படாமல் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இது குறித்து பல்வேறு புகார்கள் மனுக்கள் அதிகாரிகளுக்கு அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலம் முடிந்ததும் ஆற்றின் குறுக்கே பாலத்தை ஒட்டிய பகுதியில் பொதுமக்கள் தங்கள் சொந்த செலவில் மண் சாலை அமைத்து போக்குவரத்திற்கு பயண்படுத்திவந்தனர். ஆனால், அந்த மண் பாலமும் ஆற்று வெள்ளத்தில் அவ்வபொழுது அடித்து செல்லப்படும். இதனால் மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகிவந்தனர்.
இந்நிலையில், தற்போது போடப்பட்ட மண் சாலை சமீபத்தில் பெய்த மழையினால் இரண்டு முறை உடைப்பெடுத்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. சமீபத்தில் கூட நமது நக்கீரன் இதழில் இந்த பாலத்தின் இணைப்பு சாலை போடாததால் மக்கள் படும் சிரமங்கள் குறித்து இரண்டு பக்க செய்தி கட்டுரையை வெளியிட்டிருந்தோம். அதன் பிறகும் அரசு அதிகாரிகள் எந்த முனைப்பும் காட்டாமல் உள்ளனர்.
இந்த நிலையில், ஆலத்தியூர் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி ராமச்சந்திரன், துணைத் தலைவர் சிவசங்கரி, நல்லதம்பி மற்றும் ஊர் மக்கள் ஒத்துழைப்போடு மேம்பாலத்தின் இருபுறமும் இருசக்கர வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்லும் அளவிற்கு கிராவல் மண்ணை கொட்டி இணைப்பு சாலைபணியை தற்காலிகமாக செய்துள்ளனர்.