Skip to main content

குடிநீர் குழாய் இணைப்புகளைத் துண்டிக்க வந்த அதிகாரிகள்; பொதுமக்கள் போராட்டம்

Published on 29/09/2023 | Edited on 29/09/2023

 

Public struggle against the officials who came to disconnect the water pipelines

 

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் அடுத்த தில்லை நகர் பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இதில் ஏராளமான வீடுகள் அமைந்துள்ளன. நிலம் தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலுக்குச் சொந்தமான நிலமாகும். ஒரு சில வீடுகள் மட்டுமே பட்டா நிலத்தில் அமைந்துள்ளது. கோயில் நிலத்தில் குடியிருக்கும் பொது மக்களின் வீடுகளுக்கு வீட்டுக் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதில் பல்வேறு சிரமங்கள் இருந்த நிலையில், கடந்த ஆட்சிக் காலத்தில் தற்காலிகமாக அந்த குடியிருப்புகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டது. 

 

இந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அப்பகுதியில் மாநகராட்சி சார்பாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணியின் போது, தற்காலிகமாக அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்புகளை அகற்றும்படி மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இன்று அப்பகுதியில் உள்ள குடிநீர் குழாய் இணைப்புகளைத் துண்டிக்க மாநகராட்சி அதிகாரிகள் சென்றுள்ளனர். அதனைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் கரூர் - ஈசநத்தம் நெடுஞ்சாலையில் பெட்ரோல் பாட்டிலுடன் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோயில் நிலத்தில் குடியிருக்கும் அனைவரும் இந்து சமய அறநிலையத்துறைக்கு உரிய வரி கட்டி வருவதாகவும், குடிநீர் பிரச்சனையில் தவித்து வந்த தங்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக இணைப்புகளையும் துண்டிப்பதை ஏற்க முடியாது எனவும் தெரிவித்தனர். மேலும், குடிநீர் குழாய் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.

 

 

சார்ந்த செய்திகள்